இந்திய அரசியல் களத்தில் தற்போது ஒரு மாபெரும் அரசியல் மாற்றம் நிகழப் போவதற்கான அறிகுறி அப்பட்டமாகத் தெரியத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில், இந்த மாத இறுதியில் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை கூட்ட மத்திய அரசு அதிரடியாகத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆளுங்கட்சிக்குப் போதிய பெரும்பான்மை இல்லாததால் தொகுதி மறுசீரமைப்பு மற்றும் மகளிர் இடஒதுக்கீடு தொடர்பான அரசியல் சாசன திருத்த மசோதாக்கள் தோல்வியைத் தழுவின. ஆனால், இம்முறை இந்த இரண்டு மசோதாக்களையும் எப்படியாவது நிறைவேற்றிவிட வேண்டும் என்பதில் மோடி அரசு மிகவும் உறுதியாக உள்ளது.
இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை, அதாவது சுமார் 360 எம்.பி.க்களின் ஆதரவு கட்டாயம் தேவை.
தற்போது ஆளுங்கட்சியான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அவ்வளவு பெரிய பலம் இல்லை என்றாலும், எதிர்க்கட்சி வரிசையில் இருந்து 20 திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்களும், 6 சிவசேனா எம்.பி.க்களும் ஆளுங்கட்சிப் பக்கம் சாய்ந்துள்ளதால் மோடி அரசின் பலம் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதில் மிகப் பெரிய அரசியல் திருப்பம் என்னவென்றால், இந்தியா கூட்டணியிலிருந்து பிரிந்து வந்த திமுகவிடம் தற்போது மத்திய அரசு தீவிரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
திமுக வசம் உள்ள 22 எம்.பி.க்களின் ஆதரவைப் பெற்றுவிட்டால் இந்த மசோதாவை மிக எளிதாக நிறைவேற்றிவிடலாம் என பாஜக தரப்பு கணக்கு போடுகிறது.
தொகுதி மறுசீரமைப்பை ஆரம்பத்தில் இருந்தே மிகக் கடுமையாக எதிர்த்து வந்த திமுக, தற்போது காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
மேலும், தொகுதி மறுசீரமைப்பில் அனைத்து மாநிலங்களுக்கும் 50 சதவீதம் கூடுதல் சீட்டுகள் உறுதி செய்யப்பட்டால் ஆதரவு தரத் தயார் என சரத்பவார் கட்சியின் சுப்ரியா சுலேவும் பச்சைக் கொடி காட்டியுள்ளார்.
வரும் அக்டோபர் 26 மற்றும் 27-ஆம் தேதிகளில் பிரிக்ஸ் (BRICS) நாடாளுமன்ற அமைப்பு மாநாடு டெல்லியில் நடைபெற உள்ளதால், அந்தத் தேதிகளைக் கருத்தில் கொண்டு இந்தச் சிறப்பு கூட்டத்தொடருக்கான அறிவிப்பு ஒரு வாரத்திற்கு முன்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
