சென்னையை விட்டே போயிடுவேன்.. பிரஸ்மீட்டில் சொன்ன விஜய் ஆண்டனி

தமிழ் சினிமாவுக்கான மிகப்பெரிய இடமாக தலைநகர் சென்னை மட்டுமே இன்றளவும் திகழ்கிறது. புதிய படங்களுக்கான பிரஸ் மீட் தொடங்கி, ஆடியோ லாஞ்ச் வரை ஏகப்பட்ட விஷயங்கள் சென்னையிலேயே நடைபெற்று வருகின்றன.சமீப காலமாக நடிகர்கள் சென்னையை தாண்டி மதுரை, கோவை, திருச்சி என மற்ற மாவட்ட நகரங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நூறு சாமி படத்தின் பிரஸ் மீட்டில் பங்கேற்ற விஜய் ஆண்டனி விரைவில் சென்னையை விட்டுச் சென்றுவிடுவேன் என பேசியுள்ளார்.

விஜய் ஆண்டனி நடித்த படங்களிலேயே அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக இன்றளவும் உள்ள படமென்றால் அது பிச்சைக்காரன் தான். இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான அந்த படம் வெகுஜன ரசிகர்களை கவர்ந்த நிலையில், மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனியே இயக்கிய நிலையில், படம் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில், பிச்சைக்காரன் படத்தில் இடம்பெற்ற நூறுசாமி இருந்தாலும் அம்மாவை போல ஆகிடுமா என்கிற பாடல் வரியில் இருந்து நூறு சாமி என்கிற டைட்டிலில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் வரும் ஜூன் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக காத்திருக்கிறது.

நூறுசாமி படத்தில் கிராமத்து மனிதராக விஜய் ஆண்டனி நடித்துள்ள நிலையில், நேற்று நடைபெற்ற பிரஸ் மீட்டில் வேலை நிமித்தமாகவே சென்னையில் வசித்து வருகிறேன் என்றும் ஸ்ரீதர் வேம்பு போல சீக்கிரமே ஏதாவது ஒரு கிராமத்தில் செட்டிலாகிவிடும் பிளானில் உள்ளேன் எனக் கூறியுள்ளார். ஒரு குண்டு போட்டாலோ, கரன்ட், இணையம் கட் ஆனாலோ சென்னையில் வாழ முடியாது. கொரோனா காலத்தில் எல்லாம் ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஆனால், கிராமத்தில் ஒரு அமைதியான சூழல் மற்றும் மனதுக்கு நிறைவான வாழ்க்கையை வாழலாம். இடமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். சீக்கிரமே கிராமத்தை நோக்கி சென்று விடுவேன் என்ற அவர், பொள்ளாச்சியில் கூடிய சீக்கிரமே செட்டில் ஆகும் திட்டம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Related News

Latest News