ஆர்.எஸ்.எஸ் முதல் ஆளுநர் வரை! யார் இந்த ராஜேந்திர அர்லேகர்?

தமிழக அரசியலில் தற்போது எங்கு பார்த்தாலும் ஒலிக்கும் ஒரே பெயர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர். 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாகத் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தும், நடிகர் விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் இழுபறி நீடித்து வரும் சூழலில், இந்த முடிவின் பின்னணியில் இருக்கும் ஆளுநர் அர்லேகர் யார் என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கோவாவின் பனாஜியில் 1954-ஆம் ஆண்டு பிறந்த அர்லேகர், சிறுவயது முதலே ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தீவிரத் தொண்டராக வளர்ந்தவர். நெருக்கடி நிலைக் காலத்தில் தனது தந்தையுடன் சிறை சென்ற அனுபவம் கொண்ட இவர், கோவாவில் பாஜக-வை அடிமட்டத்திலிருந்து வளர்த்தெடுத்த முக்கியமான தலைவர்களில் ஒருவர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மனோகர் பரிக்கர் மற்றும் ஸ்ரீபாத் நாயக் ஆகியோரின் நெருங்கிய நண்பரான இவர், கோவா சட்டசபையின் சபாநாயகராக இருந்தபோது, அதனை இந்தியாவின் முதல் காகிதமில்லா சட்டசபையாக மாற்றிக் காட்டிப் பாராட்டுகளைப் பெற்றவர்.

தற்போது கேரளா மற்றும் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் அர்லேகர், விஜய்யின் கோரிக்கையை இரண்டு முறை நிராகரித்ததால் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார். 118 என்ற மேஜிக் நம்பர் இல்லாமல் ஆட்சியமைக்க அழைக்க முடியாது என்பதில் அவர் கறாராக இருக்கும் அதே வேளையில், தமிழகத்தின் பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, நடிகர் கமல்ஹாசன் “மக்களின் தீர்ப்பை ஆளுநர் அவமதிக்கிறார்” என்று காட்டமாக விமர்சித்துள்ளார். ” ஸ்டாலின் எதிர்க்கட்சியாக அமரத் தயார் என்று முதிர்ச்சியுடன் கூறுகிறார், ஆனால் 108 இடங்களில் வென்ற விஜய்யை அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்குச் செய்யும் இழுக்கு” என்று கமல் பதிவிட்டது இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

அதேபோல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநரின் இந்த நிலைப்பாட்டைக் கடுமையாகச் சாடியுள்ளன. “சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், அதற்கு முன்னரே 118 எம்.எல்.ஏ-க்களைக் கண்முன் நிறுத்துங்கள் என்று சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது” என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

திமுக தரப்பு கூட, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்க்கே முதல் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறி விஜய்க்கு மறைமுக ஆதரவைத் தெரிவித்துள்ளது. ஆனால், பாஜக தரப்போ “பெரும்பான்மை இல்லாத ஒருவரை எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும்? ஆளுநர் சட்டப்படிதான் நடக்கிறார்” என்று அவருக்கு முட்டுக் கொடுத்து வருகிறது.

இந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ராஜேந்திர அர்லேகர் எடுக்கும் அடுத்தகட்ட நகர்வுதான் தமிழகத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறது. ஒருபுறம் 113 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்துடன் விஜய் காத்துக்கொண்டிருக்க, மறுபுறம் திமுக மற்றும் அதிமுக கைகோர்க்கப் போவதாக வெளியாகும் தகவல்கள் பதற்றத்தை அதிகரித்துள்ளன.

கோவாவில் இருந்து இமாச்சலப் பிரதேசம், பீகார் எனப் பல மாநிலங்களில் ஆளுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட அர்லேகர், தமிழகத்தின் இந்தச் சிக்கலான சூழலை எப்படி கையாளப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. அடுத்த 48 மணிநேரம் தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையப்போகிறது என்பதில் ஐயமில்லை.

Related News

Latest News