சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த வாக்காளர் ஷகிலா தாக்கல் செய்த இந்த மனுவில், அதிமுக கூட்டணியில் புதிய நீதி கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குநர் சுந்தர் சி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தொழில் மற்றும் வருமான விவரங்களை முழுமையாக வெளிப்படுத்தவில்லை என மனுதாரர் கூறியுள்ளார்.
குறிப்பாக, அவ்னி டெலி மீடியா, அவ்னி மூவீஸ் மற்றும் அவ்னி சினிமாக்ஸ் போன்ற நிறுவனங்களில் இயக்குநராகவும் பங்குதாரராகவும் உள்ள அவர், அந்த நிறுவனங்களின் மூலம் பெற்ற கோடிக்கணக்கான வருமான விவரங்களை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால், இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் தரப்பு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் முறையிட்டது. இதேபோன்று, வேட்புமனுக்களில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு எதிராகவும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அவற்றில் விஜய், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மனுக்களை பரிசீலித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட வழக்குகளை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தேர்தல் சூழ்நிலையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
