கடந்த மாதம் கோவையில் அத்திக் கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடந்தது. இந்த விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி மீது செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை.
சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்றும் செங்கோட்டையன் அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் அறைக்கு செல்லாமல் சபாநாயகர் அறைக்கு சென்றார். பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் சட்டசபை கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் செங்கோட்டையன் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இபிஎஸ், “அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டத்தை செங்கோட்டையன் ஏன் தவிர்த்தார் என்று அவரிடமே கேளுங்கள். அவரிடம் கேட்டால்தானே தெரியும். தனிப்பட்ட முறையில் உள்ள பிரச்னைகளை இங்கு பேசாதீர்கள்” என்று கூறினார்.