2026 தேர்தல் முடிவுகள் ஒரு த்ரில்லர் திரைப்படத்தைப் போல நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் வேளையில், தமிழக வெற்றிக் கழகம் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற மேஜிக் எண்ணைத் தொடவில்லை என்றால் என்ன நடக்கும் என்ற கேள்வி தற்போது அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது. இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றும் விஜய் முதலமைச்சர் ஆக முடியாமல் போகுமா அல்லது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்படுமா என்ற சட்டச் சிக்கல்களை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் அடுத்து என்ன நடக்கும் என்பதற்கான விதிகள் மிகவும் தெளிவானவை. முதலாவதாக, 234 தொகுதிகளைக் கொண்ட தமிழக சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் தேவை. தற்போது விஜய் தலைமையிலான தவெக நொறுக்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கும் சூழலில், அவருக்கு இன்னும் குறுகிய இடங்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. ஒருவேளை தேர்தல் முடிவுகளின் இறுதியில் தவெக 118 இடங்களை எட்டவில்லை என்றால், தமிழகத்தில் ‘தொங்கு சட்டமன்றம்’ அதாவது ‘Hung Assembly’ என்ற சூழல் உருவாகும்.
இத்தகைய தருணத்தில் ஆளுநரின் முடிவுதான் மிக முக்கியமானதாக அமையும். பொதுவாக, மிகப்பெரிய ஒற்றைக் கட்சியின் தலைவர் என்ற முறையில், ஆட்சி அமைக்க உரிமை கோர விஜய்யைத்தான் ஆளுநர் முதலில் அழைப்பார். ஆளுநர் அழைப்பு விடுத்தவுடன், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும். ஆனால், பதவியேற்ற குறிப்பிட்ட காலத்திற்குள் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை அவர் நிரூபிக்க வேண்டும்.
இந்த இடத்தில்தான் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சவால் காத்திருக்கிறது. அந்தத் தேவையான குறிப்பிட்ட உறுப்பினர்களின் ஆதரவை அவர் எப்படிப் பெறப்போகிறார் என்பதுதான் கேள்வி. சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகளின் ஆதரவைப் பெற்று அவர் பெரும்பான்மையை நிரூபித்துவிட்டால், அவரே தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தொடர்வார்.
ஆனால், எந்த ஒரு கட்சியும் ஆதரவு அளிக்க முன்வரவில்லை என்றாலோ அல்லது மற்ற கட்சிகள் அனைத்தும் இணைந்து விஜய்க்கு எதிராக ஒரு மெகா கூட்டணியை உருவாக்கிப் பெரும்பான்மையைக் காட்டினாலோ, விஜய்யால் முதலமைச்சர் பதவியில் நீடிக்க முடியாது. அரசியலமைப்புச் சட்டம் 164-ன் படி, பெரும்பான்மை கொண்ட ஒருவரையே ஆளுநர் முதலமைச்சராக அங்கீகரிக்க முடியும்.
பலரும் அஞ்சும் ‘ஆளுநர் ஆட்சி’ அல்லது ‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ என்பது உடனடியாக வந்துவிடாது. எந்த ஒரு கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாது, எந்த ஒரு கூட்டணியும் பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இல்லை என்ற ஒரு முட்டுக்கட்டை நிலை உருவானால் மட்டுமே, சட்டப்பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்வார். அப்படி ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்தால், தமிழக சட்டமன்றம் முடக்கப்படும் அல்லது கலைக்கப்படும்.
அந்தச் சூழலில் முதலமைச்சர், அமைச்சரவை என எந்த அதிகார அமைப்பும் இருக்காது. மாநிலத்தின் முழு நிர்வாகமும் ஆளுநரின் கட்டுப்பாட்டிற்குச் செல்லும். ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் படி ஆளுநரே மாநிலத்தை நிர்வகிப்பார். ஆனால், இது ஜனநாயகத்திற்குப் பின்னடைவாகக் கருதப்படுவதால், ஆளுநர் பெரும்பாலும் அனைத்துக் கட்சிகளுக்கும் வாய்ப்பு கொடுத்து ஒரு நிலையான ஆட்சியை உருவாக்கவே முயற்சிப்பார்.
எனவே, விஜய் முதலமைச்சர் ஆவாரா என்ற கேள்விக்கு, “வாய்ப்புகள் அதிகம்” என்பதே தற்போதைய பதில். ஏனெனில் நூறுக்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்ற ஒரு கட்சியைப் புறக்கணித்துவிட்டு மற்றொரு ஆட்சியை அமைப்பது என்பது ஆளுநருக்குப் பெரிய சவாலாக இருக்கும். ஒற்றைப் பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய்க்கு முதல் வாய்ப்பு வழங்கப்படும்.
அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மற்றவர்களின் ஆதரவைத் திரட்டித் தனது பலத்தை நிரூபிப்பதில்தான் விஜய்யின் அரசியல் ராஜதந்திரம் அடங்கியிருக்கிறது. இவ்வளவு பெரிய மக்கள் ஆதரவைப் பெற்ற பிறகு, ஒரு சில இடங்களுக்காக ஆட்சி கைநழுவிப் போவதை விஜய்யும் விரும்ப மாட்டார், மக்களும் ஏற்க மாட்டார்கள். அதனால், தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிகள் அல்லது ஆதரவு குறித்த பேச்சுவார்த்தைகள் மூலமாக விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்வதற்கான சாத்தியக்கூறுகளே தற்போதைய நிலவரப்படி அதிகமாகத் தென்படுகின்றது என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
