19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் லீக் சுற்றில் தலா 14 ஆட்டங்களில் விளையாடுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் நிலையில், இன்று முக்கியமான 44-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னையில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.
சென்னை அணி இதுவரை 8 ஆட்டங்களில் 3 வெற்றியும் 5 தோல்விகளும் பெற்றுள்ளது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தொடர்ச்சியற்ற செயல்பாடு அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், சர்ப்ராஸ் கான், ஷிவம் துபே உள்ளிட்டோர் முக்கிய பங்களிப்பு அளிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் அன்ஷூல் கம்போஜ் மற்றும் நூர் அகமது போன்றோர் நம்பிக்கையாக உள்ளனர்.
அதே நேரத்தில், மும்பை அணி 8 ஆட்டங்களில் 2 வெற்றியுடன் 9-வது இடத்தில் தவிக்கிறது. பேட்டிங்கில் ரையான் ரிக்கெல்டன் சிறப்பாக செயல்பட்டாலும், சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா உள்ளிட்டோர் எதிர்பார்த்த அளவிற்கு செயல்படவில்லை. மேலும், ரோகித் சர்மாவின் உடல்நிலை காரணமாக அவர் ஆடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இரு அணிகளும் இதுவரை 40 முறை மோதியுள்ளன. இதில் மும்பை 21 வெற்றிகளும், சென்னை 19 வெற்றிகளும் பெற்றுள்ளன. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த போட்டி, இரு அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. குறிப்பாக மும்பைக்கு இது வாழ்வா-சாவா ஆட்டமாகும். ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இந்த போட்டியை எதிர்நோக்கி வருகின்றனர்.
