தமிழகத்தின் 12-வது முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சி. ஜோசப் விஜய் பொறுப்பேற்று, சரியாக ஒரு மாத காலம் நிறைவடைய போகிறது. கடந்த மே மாதம் 10-ஆம் தேதி கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்த புதிய அரசு, தனது முதல் 30 நாட்களில் மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகள் மற்றும் நிர்வாக ரீதியான மாற்றங்கள் குறித்து இப்போது விரிவாகப் பார்க்கலாம்.
பதவியேற்ற முதல் நாளிலேயே, 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம், பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்க ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று முக்கிய கோப்புகளில் முதல்வர் கையெழுத்திட்டுத் தனது பணிகளைத் தொடங்கினார்.
நிர்வாக ரீதியாக, மாநிலத்தின் நிதிநிலை குறித்த ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்ற அறிவிப்பு மற்றும் 10 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையைச் சுட்டிக்காட்டியது, புதிய அரசின் வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்தியது. சமூக அக்கறையின் ஒரு பகுதியாக, கல்வி நிலையங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி 16 லட்சம் பேருக்குப் பயனளித்ததோடு, குறு விவசாயிகளின் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான பயிர்க்கடன்களைத் தள்ளுபடி செய்தது அரசின் மற்றுமொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
மத்திய அரசுடனான உறவைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து மேகதாது அணை, மீனவர் நலன் மற்றும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து முதல்வர் வலியுறுத்தினார். அதே சமயம், நிர்வாகத்தில் ஊழலைத் தடுக்க லஞ்சம் மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரிக்க ஆளுநரிடம் அனுமதி கோரியது அரசியல் வட்டாரங்களில் முக்கிய நகர்வாகக் கருதப்பட்டது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டு, ஒரு புதிய அதிகாரப் பகிர்வு முறை தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கப் பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் புதிய டி.ஜி.பி நியமனம் மற்றும் 800-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது எனத் துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை சென்னையில் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன் இந்த ஒரு மாத காலப் பயணம் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டுகிறது. நிதி நெருக்கடிகளுக்கு இடையே, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் சவாலை இந்த அரசு எப்படிக் கையாள்கிறது என்பதை வரும் காலங்களில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
