‘விஜய்யால்’ இது முடியுமா?

தமிழக அரசியலில் ஒரு புயலைக் கிளப்பியிருக்கிறது நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் அள்ளி வீசியிருக்கும் வாக்குறுதிகள் பொதுமக்களை வியக்க வைத்தாலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியில் இது பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நகைக்கடன் தள்ளுபடி குறித்து விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அறிவித்த ‘திருமணத்திற்கு ஒரு பவுன் தங்கம்’ திட்டம் இப்போது ஹாட் டாபிக் ஆகியிருக்கிறது.

இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் எழுப்பியுள்ள கேள்விகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. இன்று தங்கம் விலை ஒரு சவரன் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் திருமணமாகும் அனைத்துப் பெண்களுக்கும் ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்குவது நிதி ரீதியாக சாத்தியமா என்கிற சந்தேகத்தை அவர் முன்வைக்கிறார். வெறும் தங்கம் மட்டுமல்ல, பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஊக்கத்தொகை, முதியோர்களுக்கு 3,000 ரூபாய், ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் என விஜய்யின் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமானவை.

ஆனால், இதில் இருக்கும் எதார்த்தமான சிக்கல் என்னவென்றால், இவை நீண்டகாலத் திட்டங்கள் அல்ல. ஆட்சிக்கு வந்த முதல் இரண்டு மூன்று மாதங்களிலேயே மக்கள் இதை எதிர்பார்க்கத் தொடங்குவார்கள். ஏற்கனவே போக்குவரத்துத் துறை பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம் என்பதை சென்னை முதல் கன்னியாகுமரி வரை எப்படிச் செயல்படுத்தப் போகிறார்கள்? இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வரும்? என்பதுதான் தராசு ஷ்யாமின் பிரதான கேள்வியாக இருக்கிறது.

நிதியைத் தாண்டி நிர்வாகச் சிக்கல் குறித்தும் அவர் எச்சரிக்கிறார். தற்போதுள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் பல ஆண்டுகளாக திமுக அல்லது அதிமுக ஆட்சியில் பணியாற்றியவர்களாகவே இருப்பார்கள். இவர்களைத் தவிர்த்துவிட்டு, அனுபவம் குறைந்த புதிய அதிகாரிகளை விஜய் நம்பி இறங்கினால், நிர்வாகம் தடுமாறக்கூடும். அமைச்சர்களுக்கும் அனுபவம் இல்லை, அதிகாரிகளுக்கும் அனுபவம் இல்லை என்ற சூழல் உருவானால் அது அரசுக்கே நெருக்கடியைத் தரும்.

“கல்லெறிந்தவர்கள் மாலை போடுவார்கள், மாலை போட்டவர்கள் கல்லெறிவார்கள்” என்ற அண்ணாவின் பொன்மொழியைச் சுட்டிக்காட்டும் தராசு ஷ்யாம், மக்கள் ஆதரவு என்பது எப்போது வேண்டுமானாலும் மாறக்கூடியது என்கிறார். மாற்றத்தை விரும்பி மக்கள் வாக்களித்தாலும், அதைச் சரியாகப் பயன்படுத்தி நிர்வாகத்தைச் சீரமைப்பது விஜய்க்கு ஒரு மிகப்பெரிய சவாலாகவே இருக்கும். சலுகைகளை அறிவிப்பது எளிது, ஆனால் அதைச் செயல்படுத்தப் போகும் அந்த ‘மேஜிக்’ விஜய்யிடம் இருக்கிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News