சொந்த ஊரில் பாரதிராஜா உடல்.. அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம்…

தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்குநர் பாரதிராஜா வயோதிகம் மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 84.

‘16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், தமிழ் சினிமாவை ஸ்டுடியோக்களின் எல்லையிலிருந்து கிராமப்புறங்களுக்கு கொண்டு சென்ற முன்னோடியாகப் போற்றப்படுகிறார்.

‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’, ‘கிழக்கு சீமையிலே’ உள்ளிட்ட பல படைப்புகள் மூலம் இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்தார்.

பாரதிராஜாவின் மனைவி சந்திரலீலா. இவர்களுக்கு மனோஜ் என்ற மகனும், ஜனனி என்ற மகளும் உள்ளனர். நடிகராக அறியப்பட்ட மனோஜ் கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மகன் மறைவுக்குப் பிறகு மனமுடைந்திருந்த பாரதிராஜா, சில மாதங்கள் மலேசியாவில் மகள் வீட்டில் தங்கி ஓய்வு எடுத்தார். பின்னர் சென்னை திரும்பிய அவருக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டதால் தியாகராயநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

உடல்நிலை சற்று மேம்பட்டதால் பிப்ரவரி மாதம் வீடு திரும்பி, நீலாங்கரையில் ஓய்வில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அவர் காலமானார். அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியது. நடிகை ராதிகா, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்ட பலர் அவரது இல்லத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தினர்.

முதலமைச்சர் விஜய் நேரில் வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதுடன், அவரது இறுதி நிகழ்வுகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவித்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக நீலாங்கரையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் பின்னர் சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வத்தலக்குண்டு அருகிலுள்ள அவரது பண்ணை வீட்டில் உறவினர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இன்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Related News

Latest News