Monday, January 12, 2026

அறுவை சிகிச்சை தேவையில்லை., மூட்டு வலியை வேரோடு அழிக்கும் ஊசி கண்டுபிடிப்பு

இன்றைய நவீன வாழ்க்கை முறையில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், இளைஞர்களையும் அதிகமாக பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சனை மூட்டு வலி ஆகும். மூட்டுகளில் உள்ள குருத்தெலும்புகள் தேய்மானம் அடைவதே இதற்கான முக்கிய காரணமாகும்.

ஒருமுறை தேய்ந்து போன குருத்தெலும்பை மீண்டும் வளர்ப்பது மருத்துவ உலகில் நீண்ட காலமாக ஒரு பெரிய சவாலாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அமெரிக்காவின் ஸ்க்ரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு புரட்சிகரமான தீர்வைக் கண்டறிந்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான ஆய்வின் அடிப்படையில், விஞ்ஞானிகள் மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் ‘14-3-3 zeta’ என்ற குறிப்பிட்ட புரதத்தை மையமாக வைத்து இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். இந்த புரதம் செல்கள் முதுமையடைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புரதத்தை நேரடியாக மூட்டுப் பகுதிகளுக்குள் செலுத்தியபோது, அது தேய்ந்து போன குருத்தெலும்புகளை மீண்டும் வளரச் செய்வதோடு, மேலும் தேய்மானம் அடையாமல் பாதுகாக்கும் தன்மையும் கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை மருத்துவ உலகம் ஒரு முக்கியமான புரட்சியாகக் கருதுகிறது.

விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள இந்த புதிய ஊசி மருந்து, பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதிக்குச் சென்றவுடன் அங்குள்ள செல்களுக்கு புத்துயிர் அளிக்கிறது. இந்த ஊசி மருந்து வீக்கத்தைக் குறைப்பதுடன் மட்டுமல்லாமல், புதிய குருத்தெலும்பு திசுக்கள் உருவாவதற்கான சமிக்ஞைகளையும் செல்களுக்கு வழங்குகிறது. எலிகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சில வாரங்களிலேயே தேய்மானம் அடைந்த மூட்டுகள் குணமடையத் தொடங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சந்தையில் உள்ள பெரும்பாலான மூட்டு வலி மருந்துகள் வலியைக் குறைப்பதற்காக மட்டுமே பயன்படுகின்றன. ஆனால் இந்த புதிய ‘ஆண்டி-ஏஜிங்’ ஊசி, மூட்டு வலியின் அடிப்படை காரணத்தையே சரிசெய்ய முயல்கிறது. மேலும், மூட்டுத் தேய்மானம் அதிகமாகும் நிலையில் பொதுவாக மேற்கொள்ளப்படும் முழங்கால் மாற்று அறுவை சிகிச்சைக்கு மாற்றாக, இந்த ஊசி மருந்து ஒரு சிறந்த தீர்வாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், விளையாட்டின் போது ஏற்படும் குருத்தெலும்பு கிழிவுகள் மற்றும் காயங்களுக்கு விரைவான தீர்வை வழங்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த ஆய்வு விலங்குகள் மீதான சோதனைகளில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மனிதர்களில் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

Related News

Latest News