அமெரிக்காவில் உயர்கல்வி கற்று அங்கேயே வேலை செய்ய வேண்டும் என்ற கனவில் இருக்கும் சர்வதேச மாணவர்கள், குறிப்பாக இந்திய மாணவர்களின் தலையில் இடி விழுவது போன்ற ஒரு அதிரடி அறிவிப்பை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவில் படிப்பை முடித்த பிறகு மாணவர்கள் வேலை செய்வதற்கு வழங்கப்படும் ஓபிடி (OPT) எனப்படும் திட்டத்திற்கு, இனி பல்கலைக்கழகங்கள் ஒரு மாணவருக்கு தலா 70,000 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 67 லட்சம் ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும் என அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) பரிந்துரைத்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், இந்த வேலைவாய்ப்பு அனுமதியைப் புதுப்பிக்கக் கூடுதலாக 30,000 டாலர், அதாவது சுமார் 29 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பதும் மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஓபிடி (OPT) திட்டம் என்பது சர்வதேச மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்த பிறகு, ஓராண்டு காலம் அமெரிக்காவில் வேலை அனுபவம் பெற அனுமதிக்கும் ஒரு திட்டமாகும்.
குறிப்பாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் எனப்படும் STEM துறைகளில் பயிலும் மாணவர்களுக்குக் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் வேலை செய்ய அனுமதி உண்டு.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள இந்த அதிரடி கட்டண உயர்வு, சர்வதேச மாணவர்களை அதிகளவில் நம்பியிருக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுக்கும், தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் அமெரிக்காவிற்குச் செல்லும் சூழலில், இந்தக் கட்டண உயர்வு அவர்களின் எதிர்காலத்தைத் திக்குமுக்காடச் செய்துள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்துவதைத் தடுக்கவும், விசா முறைகேடுகளைக் குறைக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ட்ரம்ப் நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கல்வித்துறை நிபுணர்கள் இதனை வன்மையாகக் கண்டிக்கின்றனர். உலக நாடுகளிலிருந்து வரும் திறமையான மாணவர்களை அமெரிக்காவிலிருந்து விரட்டுவது நாட்டின் கண்டுபிடிப்புகளையும், பொருளாதார வளர்ச்சியையும், உலகளாவிய தலைமையையும் சிதைக்கும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். ஏற்கனவே மாணவர்கள் 4 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் தங்குவதற்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய கட்டண உயர்வு மாணவர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு எதிராகப் பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த விசித்திரமான கட்டண உயர்வுக்கு எதிராகப் பல்வேறு கல்வி அமைப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடவும் வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த சில மாதங்களாக ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்களின் விசா ரத்து செய்யப்பட்டு, அவர்கள் நாடு கடத்தப்படும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள சூழலில், ட்ரம்ப் நிர்வாகத்தின் இந்த அடுத்தகட்ட நகர்வு அமெரிக்கக் கல்விச் சந்தையில் ஒரு மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
