தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., மக்கள் நீதி மய்யம், வி.சி.க உட்பட 53 கட்சிகளின் தலைவர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக ஆதரவு கொடுத்தது. ஆனால் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக நாடகம் நடத்துகிறது என பேட்டி அளித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் ரகுபதி பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அவர் பேசியதாவது : தனது கள்ளக்கூட்டாளி பாஜகவுடன் இணைந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்து அடிமை ஆட்சி நடத்திய அதிமுக இதனை சொல்வதற்கு எதாவது தகுதியிருக்கிறதா? அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கெடுக்காமல் போனால் தமிழ்நாட்டு மக்களிடம் அம்பலப்பட்டு விடுவோமோ எனும் அச்சத்தில் கூட்டத்தில் கலந்து கொண்டு அதிமுக நாடகம் நடத்தியிருக்கின்றது, என்பதையே ஜெயக்குமாரின் பேச்சு காட்டுகிறது. பாஜகவுடன் இணைந்து நீங்கள் நடத்தும் கபட நாடகம் என்றைக்கும் வெற்றி பெற போவதில்லை, உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என அவர் பேசியுள்ளார்.