வானியல் ஆர்வலர்களுக்கும், பொதுமக்களுக்கும் விருந்தளிக்கும் வகையில் நாளை வானில் பிரமாண்டமான முழு நிலவு தோன்றவுள்ளது. ‘பீவர் சூப்பர் மூன்’ (Beaver Supermoon) என அழைக்கப்படும் இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண மக்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
இந்திய நேரப்படி நாளை இரவு 8.23 மணிக்கு நிலவு தனது முழுமையான ஒளியை அடையும். சூரியன் மறைந்த பிறகு கிழக்கு வானில் நிலவு உதிக்கும்போது இந்தக் காட்சியை மிகவும் தெளிவாக ரசிக்க முடியும். நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக அருகில், சுமார் 3 லட்சத்து 60 ஆயிரத்து 765 கிலோமீட்டர் தொலைவில் வருவதால், வழக்கமான முழு நிலவைவிட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் தோன்றும் முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பாக நீர்நாய்கள் தங்களது இருப்பிடங்களைத் தயார்படுத்தும் காலத்தைக் குறிக்கும் வகையில் இந்தப் பெயர் உருவானது.
இந்தச் சூப்பர் மூனைப் பார்ப்பதற்கு தொலைநோக்கி உள்ளிட்ட சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. வானம் மேகமூட்டமின்றித் தெளிவாக இருந்தால் வெறும் கண்களாலேயே கண்டு ரசிக்கலாம்.
இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 24-ந்தேதியும் மற்றொரு சூப்பர் மூன் தோன்றவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
