நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் குரோம் பிரவுசரைப் பயன்படுத்துபவரா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்கான மிக முக்கிய எச்சரிக்கை.
கூகுள் குரோம் பிரவுசர் மற்றும் ஸ்னாப்டிராகன் பிராசஸர்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளைப் பயன்படுத்தி, உலகெங்கிலும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ள பகீர் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் வெளிநாட்டு உளவுத்துறையுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ‘ஏபிடி-29’ (APT29) என்ற அதிபயங்கர ஹேக்கிங் கும்பல்தான் இந்த மாபெரும் சைபர் தாக்குதலை அரங்கேற்றியுள்ளதாக ‘செகோயா’ (Sekoia) என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனம் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற தங்கும் விடுதிகள் மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்களைப் போலவே போலி இணையதளங்களை உருவாக்கியும், ஆயிரக்கணக்கான சாதாரண இணையதளங்களுக்குள் ரகசியக் குறியீடுகளைப் புகுத்தியும் இந்தக் கும்பல் தங்களது வேட்டையை நடத்தியுள்ளது.
பயனர்கள் அத்தகைய இணையதளங்களுக்குள் சென்றவுடன், குரோம் பிரவுசரின் 139 முதல் 145 வரையிலான பதிப்புகளில் உள்ள பிழையையும், குவால்காம் நிறுவனத்தின் அட்ரினோ கிராபிக்ஸ் சிப்பில் உள்ள ஓட்டையையும் பயன்படுத்தி, ‘ஆண்ட்ரோஸ்னிட்ச்’ (AndroSnitch) என்ற உளவு மால்வேரை போனுக்குள் சத்தமில்லாமல் இறக்கியுள்ளனர்.
இந்த வைரஸ் போனுக்குள் நுழைந்ததும், பிரவுசரில் சேமித்து வைக்கப்பட்டுள்ள பாஸ்வேர்டுகள், லாகின் விவரங்கள், பிரவுசிங் ஹிஸ்டரி மற்றும் வைஃபை பாஸ்வேர்டுகளைக் கூட திருடி ஹேக்கர்களுக்கு அனுப்பியுள்ளது.
இதில் மிகவும் விசித்திரமான விஷயம் என்னவென்றால், ஒருவேளை சம்பந்தப்பட்ட போன் ‘சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா’ மாடலாக இருந்தால் மட்டும், இந்த வைரஸ் தானாகவே தனது வேலையை நிறுத்திக்கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல், ஐபோன் பயனர்களையும் இக்கும்பல் விட்டுவைக்கவில்லை. ஐஓஎஸ் 16 முதல் 18.5 வரையிலான பதிப்புகளைக் கொண்ட ஐபோன்களில், ‘டார்க்ஸ்வார்ட்’ (DarkSword) என்ற உளவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பயனர்களின் புகைப்படங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் பாஸ்வேர்டுகளை இவர்கள் திருடியுள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் உக்ரைன் நாடுகளைக் குறிவைத்துத் தொடங்கப்பட்ட இந்தத் தாக்குதல், ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
எனவே, இதுபோன்ற நவீன சைபர் கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க, உங்கள் மொபைலில் உள்ள கூகுள் குரோம் செயலியையும், போனின் சாப்ட்வேரையும் உடனடியாக அப்டேட் செய்துகொள்ளுமாறு சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
