தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, 7 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, வரும் நவம்பர் 13ஆம் தேதி வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.
இது தொடர்ந்து வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. மேலும் சாதகமான வானிலை சூழல் அமைந்தால் புயலாகவும் வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழையின் தாக்கம் அதிகரிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
