வங்கி வாடிக்கையாளர்களுக்கு விழுந்த பேரிடி? மத்திய அரசு வெளியிட்ட அவசர எச்சரிக்கை!

இந்தியாவின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களைக் குறிவைத்து, சீனாவுடன் தொடர்புடைய அதிநவீன செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் மூலம் மிகப்பெரிய சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக இந்திய சைபர் பாதுகாப்பு முகமையான சி.இ.ஆர்.டி-இன் (CERT-In) மிக முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.

‘கிராஃப்டி ஃபால்கன்’ (Crafty Falcon) என்று அழைக்கப்படும் மர்ம ஹேக்கிங் கும்பல் ஒன்று, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், ஃபின்டெக் செயலிகள் மற்றும் கிரிப்டோகரன்சி தளங்களுக்குள் ஊடுருவி, இயந்திர வேகத்தில் பணத்தைக் கொள்ளையடித்து வருவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சைபர் கொள்ளையர்கள் ஆர்டெக்ஸ் (ARTEX), பென்ட்-ஏஜிஐ (PentAGI), கெய்ர்ன் (Cairn) மற்றும் சைபர் ஸ்ட்ரைக் (CyberStrike) ஏஐ ஆகிய நான்கு ஏஐ கருவிகளைப் பயன்படுத்தி, மனிதர்களால் கணிக்க முடியாத வேகத்தில் நிறுவனங்களின் பாதுகாப்பு வளையங்களை உடைத்து வருகின்றனர்.

இதில் குறிப்பாக சீனாவில் உருவாக்கப்பட்ட ஆர்டெக்ஸ் உள்ளிட்ட கருவிகள், ஏற்கனவே தென் கொரிய வங்கிகள் மற்றும் பதினான்கு நாடுகளில் உள்ள இருநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்களை உளவு பார்க்கவும் தாக்கவும் பயன்படுத்தப்பட்டவை என்பது சர்வதேச சைபர் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகாரிகளின் கண்காணிப்பு குறைவாக இருக்கும் வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தினங்களைத் துல்லியமாகக் கணக்கிட்டு இந்தக் கும்பல் தங்களது வேட்டையை நடத்துகிறது.

வங்கிகளையும் நிதி நிறுவனங்களையும் இணைத்து உடனடியாகக் கடன் வழங்கப் பயன்படும் ‘ஏ.பி.ஐ’ (API) எனப்படும் மென்பொருள் இணைப்புகளை ஹேக் செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் சொந்த பணப் பரிவர்த்தனை அமைப்புகள் வழியாகவே இவர்கள் பணத்தைத் திருடுகின்றனர்.

இதற்கு உதாரணமாக, கடந்த மாதம் மும்பையைச் சேர்ந்த இரண்டு நிதி நிறுவனங்களின் ஐசிஐசிஐ வங்கிக் கணக்குகளில் இருந்து, வெறும் இரண்டே நாட்களில் எழுநூறுக்கும் மேற்பட்ட உடனடிப் பரிவர்த்தனைகள் மூலம் சுமார் இரண்டு மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் பதினாறு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் சுருட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்த நிறுவனங்களைக் கூட இந்த ஏஐ தொழில்நுட்பம் மீண்டும் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி வருவதால், இந்த அச்சுறுத்தல் இன்னும் தீவிரமாகத் தொடர்வதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி சைபர் பாதுகாப்புச் சோதனைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவு மூலம் நடக்கும் இந்த நவீன நிதி மோசடிகள் இந்தியப் பொருளாதாரத் துறைக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

Related News

Latest News