இந்தியாவில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சட்டவிரோதமாகக் கொண்டு வரப்படும் தங்கத்தின் அளவு, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத வகையில் சுமார் 1,500 சதவீதம் வரை விஸ்வரூபம் எடுத்துள்ளதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் வெறும் மூன்று மெட்ரிக் டன்னாக மட்டுமே இருந்த கணக்கில் வராத தங்கத்தின் வரத்து, இந்த ஆண்டு அதே காலாண்டில் கிடுகிடுவென உயர்ந்து 50 மெட்ரிக் டன்களைத் தொட்டுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தியாவில் பதிவாகியுள்ள மிக உச்சக்கட்ட முறைகேடான தங்க வரத்து இதுவாகும்.
இந்தத் திடீர் விபரீதத்திற்குக் காரணம் மத்திய அரசு உயர்த்திய இறக்குமதி வரிதான் என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். சர்வதேச அளவில் அதிகரித்த எரிபொருள் செலவு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 15 சதவீதமாக அரசு இரட்டிப்பாக்கியது.
ஆனால், இந்த அதிகப்படியான வரி உயர்வில் இருந்து தப்பித்து அதிக லாபம் பார்ப்பதற்காக, சில வர்த்தகர்களும் தனிநபர்களும் அரசுக்குத் தெரியாமல் குறுக்கு வழிகளில் தங்கத்தை நாட்டுக்குள் கொண்டு வருவதைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதன் நேரடி எதிரொலியாக, உள்நாட்டு நகைச் சந்தையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இறக்குமதி வரியைத் தவிர்ப்பதற்காக முறையான ரசீதுகளோ அல்லது பில்களோ இல்லாமல், நேரடியாக ரொக்கப் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு மறைமுகமாகத் தங்கம் மற்றும் நகைகளை விற்பனை செய்யும் போக்கு உள்நாட்டில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதனால் நாட்டுக்குள் புழங்கும் தங்கத்தின் உண்மையான அளவைக் கண்காணிப்பதும், வரி ஏய்ப்பைத் தடுப்பதும் அரசு அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
மறுபுறம், சர்வதேச சந்தையில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை சுமார் 6.8 சதவீதம் வரை சரிந்து, ஒரு அவுன்ஸ் 4,000 டாலருக்கும் கீழே வீழ்ச்சியடைந்துள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகை மற்றும் திருமண சீசன் களைகட்டத் தொடங்கியுள்ள போதிலும், தங்கத்தின் விலை இன்னும் குறையக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் நகைக்கடை உரிமையாளர்களும் பொதுமக்களும் தங்கம் வாங்குவதில் மிகுந்த நிதானம் காட்டி வருகின்றனர்.
வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்க அரசு போட்ட வரி கணக்கு, இறுதியில் கணக்கில் வராத தங்கப் புழக்கத்திற்கு வழிவகுத்திருப்பது இந்தியப் பொருளாதார வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
