ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்களின் முதலீடாகக் கருதப்பட்ட வைரங்கள் தற்போது கடும் விலை சரிவைச் சந்தித்து வருகின்றன. குறிப்பாக, ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்படும் வைரங்களின் பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்துள்ளதால் இயற்கை வைரங்களின் சந்தையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆய்வக வைரங்களின் விலை, 2022-ஆம் ஆண்டில் ஒரு காரட்டுக்கு சுமார் 389 டாலராக இருந்தது. ஆனால் தற்போது அது 71 டாலராகக் குறைந்துள்ளது. அதாவது நான்கு ஆண்டுகளில் சுமார் 82 சதவீதம் விலை சரிந்துள்ளது.
இதற்கு முக்கியக் காரணம், ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் வைரங்களும் இயற்கை வைரங்களைப் போலவே தோற்றம் மற்றும் தன்மைகளைக் கொண்டிருப்பதுதான். மேலும், செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் அதிகரித்ததால் சந்தையில் விநியோகமும் உயர்ந்துள்ளது.
இந்தியாவின் மொத்த வைர ஏற்றுமதியில் ஆய்வக வைரங்களின் பங்கு காரட் அடிப்படையில் சுமார் 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் இயற்கை வைர வர்த்தகமும் சவால்களைச் சந்தித்து வருகிறது.
வைரம் வாங்கலாமா? வேண்டாமா?
ஆய்வக வைரங்களை தினசரி பயன்பாட்டிற்காகவோ, பரிசளிப்பதற்காகவோ வாங்கலாம். ஆனால் முதலீட்டு நோக்கில் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இயற்கை வைரங்களின் மறுவிற்பனை மதிப்பும் குறைய வாய்ப்புள்ளது.
வைரம் வாங்கும்போது கவனிக்க வேண்டிய 3 விஷயங்கள்:
- வைரத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட கிரேடிங் சான்றிதழைப் பெறுங்கள்.
- குறைந்தது மூன்று நகைக்கடைகளில் ஒரு காரட் வைரத்தின் விலையை ஒப்பிட்டுப் பாருங்கள்.
- பழைய வைரத்தை மறுவிற்பனை செய்யும்போது கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள்.
எனவே, வைரத்தை முதலீடாகப் பார்ப்பதைவிட ஆபரணமாக வாங்கும்போது அதன் தரம், விலை மற்றும் மறுவிற்பனை நிபந்தனைகளை நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பது அவசியம்.
