CSK செய்த மாபெரும் தவறு! 4 பவுலிங் கோச்-கள் எதற்கு?

ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ், கடந்த மூன்று சீசன்களாகத் தொடர்ந்து பிளே-ஆஃப் சுற்றுக்குக் கூட தகுதிபெற முடியாமல் போனதால், வரும் 2027-ஆம் ஆண்டு தொடருக்காகத் தனது ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவையும் அடியோடு மாற்றியமைத்துள்ளது.

பல ஆண்டுகளாக அணியின் முதுகெலும்பாகத் திகழ்ந்த தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெமிங் மற்றும் 2018 முதல் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த மைக் ஹஸ்ஸி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டு, ஜாகீர் கான் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருடன் மோஹித் சர்மா, ஆல்பி மோர்கல் மற்றும் காரெத் பேட்டி ஆகியோர் புதிய பயிற்சியாளர்களாக இணைந்துள்ள நிலையில், ஸ்ரீதரன் ஸ்ரீராம் மற்றும் ஜேம்ஸ் ஃபாஸ்டர் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இவ்வளவு பெரிய மாற்றங்களைச் செய்த சிஎஸ்கே நிர்வாகம், அடுத்த சீசனுக்கு தங்களுக்குப் பிரத்யேக பேட்டிங் பயிற்சியாளரே கிடையாது என அறிவித்திருப்பதுதான் இப்போது கிரிக்கெட் உலகில் மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிஎஸ்கே நிர்வாகத்தின் இந்த விசித்திரமான முடிவை இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் சடகோபன் ரமேஷ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது வெறும் ஆச்சரியமல்ல, வியூக ரீதியாக சிஎஸ்கே செய்யும் மிகப்பெரிய தவறு என்று அவர் எச்சரித்துள்ளார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களின் புள்ளிவிவரங்களை உற்றுநோக்கினால், எதிரணிகளுக்கு மிகக் குறைந்த ரன்களை விட்டுக்கொடுத்த சிறந்த பந்துவீச்சு அணிகளின் பட்டியலில் சிஎஸ்கே முதல் இரண்டு இடங்களுக்குள் வலுவாக உள்ளது.

ஆனால், பேட்டிங்கில் சராசரியாக வெறும் 178 ரன்கள் மட்டுமே எடுத்து, புள்ளிப்பட்டியலின் கடைசி இரண்டு இடங்களுக்குத் தள்ளப்பட்டுப் பரிதாபமாகத் திணறியுள்ளது.

இதன்மூலம் அணியின் உண்மையான பலவீனமே பேட்டிங்கில்தான் இருக்கிறது என்பது அப்பட்டமாகத் தெரியும் நிலையில், அதைச் சரிசெய்வதை விட்டுவிட்டு ஜாகீர் கான், மோஹித் சர்மா, காரெத் பேட்டி மற்றும் ஆல்பி மோர்கல் எனப் பந்துவீச்சாளர்களை மட்டுமே பயிற்சியாளர் குழுவில் நிரப்பியிருப்பது எந்த வகையில் நியாயம் என ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜாம்பவான் மைக் ஹஸ்ஸி பயிற்சியாளராக இருந்தபோதே சிஎஸ்கேவின் பேட்டிங் தடுமாறிய சூழலில், இப்போது அணியில் உள்ள ஏராளமான இளம் பேட்ஸ்மேன்களை வழிநடத்த ஒரு பேட்டிங் பயிற்சியாளர் கூட இல்லாதது புரியாத புதிராகவே உள்ளது.

அதேசமயம், இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் மகேந்திரசிங் தோனியின் மாஸ்டர் பிளான் ஏதேனும் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அவர் கிளப்பியுள்ளார்.

அடுத்த சீசனில் தோனி ஒரு வீரராகக் களமிறங்குவாரா என்பது இன்னும் உறுதியாகத் தெரியாத நிலையில், ஒருவேளை தோனியே நேரடியாகக் களமிறங்கி இளம் பேட்ஸ்மேன்களைப் பட்டை தீட்டும் முழுநேர ஆலோசகராக மாறப் போகிறாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

உண்மையிலேயே தோனி அந்தப் பொறுப்பைக் கையில் எடுத்தால் அது சிஎஸ்கேவுக்குக் கிடைத்த ஜாக்பாட்டாக அமையும்; அப்படி இல்லாமல் பந்துவீச்சுப் பயிற்சியாளர்களை மட்டுமே நம்பி களமிறங்கினால், அது சென்னை அணிக்குப் பெரும் பின்னடைவாகவே முடியும் என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் தீர்க்கமான கருத்தாக உள்ளது.

Related News

Latest News