இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எழுபத்தி ஏழாவது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது, அவரது வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர் ஒருவர் கண்ணாடி பாட்டிலை வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை இரவு ஜெருசலேமில் உள்ள ‘மஹானே யெஹுதா (Mahane Yehuda)’ மார்க்கெட் பகுதியை கடந்து நெதன்யாகுவின் கார் சென்று கொண்டிருந்தது. அவருக்காக அந்த பகுதியில் ரயில் சேவைகள் கூட தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டு நின்று அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்துக் கொண்டிருந்த போது, திடீரென கூட்டத்திற்குள் இருந்து ஒரு கண்ணாடி பாட்டில் அவரது பாதுகாப்பு வாகனங்களை நோக்கி வீசப்பட்டது.
உடனடியாக தடுப்புகளைத் தாண்டி குதித்த பாதுகாப்புப் படையினர், அந்த பாட்டிலை வீசிய நபரைத் தீவிரமாகத் தேடத் தொடங்கினர்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் நெதன்யாகுவின் பயணத்தில் எந்தவித தடங்கலும் ஏற்படவில்லை. அவர் தனது மனைவி சாராவுடன் திட்டமிட்டபடி அந்த மார்க்கெட் பகுதியை அடைந்ததும், அங்கு திரண்டிருந்த மக்கள் இஸ்ரேல் மற்றும் பல்வேறு கொடிகளை அசைத்து பிறந்தநாள் பாடல்களை பாடி அவரை பிரம்மாண்டமாக வரவேற்றனர்.
ஒருபுறம் இப்படி கோலாகலமான வரவேற்பு இருந்தாலும், அன்றைய தினமே டெல் அவிவ் நகரில் நெதன்யாகு மிகக் கடுமையான மக்கள் எதிர்ப்பையும் சந்திக்க நேரிட்டது.
அங்குள்ள ஹடிக்வா மார்க்கெட் பகுதிக்கு அவர் சென்றபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர், நீங்கள் ஏன் ஹமாஸ் அமைப்புக்கு பல மில்லியன் பணத்தை அனுப்பினீர்கள் என ஆக்ரோஷமாக நேரடியாகவே கேள்வியெழுப்பினார்.
அந்த நபர் அதனை தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது, நெதன்யாகுவின் ஆதரவாளர்கள் அவரது போனை தட்டிவிட்டு அவரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.
இந்த போராட்டத்தில் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக, உயிரிழந்த பிணைக் கைதியான காய் இலூஸ் என்பவரின் தந்தை மைக்கேல், பிரதமருக்கு எதிராக போராடியதற்காக தான் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறி கண்ணீர் மல்க வேதனை தெரிவித்தார்.
தன் மகனை இழந்து தவிக்கும் ஒரு தந்தை சொந்த நாட்டு மக்களாலேயே தாக்கப்படுவது மிகப்பெரிய அவமானம் என்று கூறிய அவர், வரும் தேர்தலில் மக்கள் இந்த அநீதிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போரும் அரசியல் குழப்பங்களும் சூழ்ந்துள்ள இஸ்ரேலில், பிரதமரின் பிறந்தநாளன்று அரங்கேறியுள்ள இந்தத் தொடர் சம்பவங்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளன.
