Zomato, Swiggy-க்கு ஆப்பு வைத்த ‘Flipkart’! வருகிறது புதிய ‘Eat-in by Minutes’ சேவை!

இந்தியாவில் ஆன்லைன் மூலமாக உணவு ஆர்டர் செய்யும் உணவு டெலிவரி மார்க்கெட்டில், இதுவரை ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ ஆகிய இரண்டு நிறுவனங்களே அசைக்க முடியாத ராஜாவாக கோலோச்சி வந்தன.

ஆனால், இவர்களின் ஏகபோக சாம்ராஜ்யத்திற்கு செக் வைக்கும் விதமாக, இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தற்போது ‘ஈட்-இன் பை மினிட்ஸ்’ (Eat-in by Minutes) என்ற புதிய உணவு டெலிவரி சேவையை அதிரடியாக அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கான சோதனை ஓட்டம் தற்போது பெங்களூருவில் உள்ள பிளிப்கார்ட் தலைமையகத்தில் ஊழியர்களுக்கு இடையே மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த சேவையில் ஒரு மிகப்பெரிய மாஸ்டர் பிளானை பிளிப்கார்ட் கையில் எடுத்துள்ளது.

வழக்கமாக உணவகங்களிடம் இருந்து ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்கள் இருபது முதல் இருபத்தி ஐந்து சதவீதம் வரை அதிக கமிஷன் தொகையை வசூலித்து வருகின்றன. ஆனால், பிளிப்கார்ட் வெறும் பத்து சதவீதம் மட்டுமே கமிஷன் வாங்கும் என தேசிய உணவகங்கள் சங்கத்தின் தலைவர் சாகர் தர்யானி தெரிவித்துள்ளார்.

கமிஷன் குறைவு என்பதால், பல உணவகங்கள் தாமாகவே முன்வந்து பிளிப்கார்ட்டுடன் இணையும் என்றும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு மிகக் குறைந்த விலையில் உணவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பிளிப்கார்ட்டின் இந்த புதிய உணவு டெலிவரி சேவை, அக்டோபர் இறுதிக்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்றும், இந்த ஆண்டு இறுதிக்குள் நாட்டின் ஐந்து முதல் ஆறு முக்கிய நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக ஈ கார்ட் என்ற பிளிப்கார்ட்டின் சொந்த லாஜிஸ்டிக்ஸ் சேவையே பயன்படுத்தப்பட உள்ளது. பெங்களூருவில் பிளிப்கார்ட் டெலிவரி ஊழியர்கள் புதிய லோகோவுடன் வலம் வருவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

உணவு டெலிவரி சந்தையில் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கடந்த இரண்டாயிரத்தி இருபதாம் ஆண்டு அமேசான் நிறுவனம் பெங்களூருவில் உணவு டெலிவரி சேவையைத் தொடங்கி, இரண்டே ஆண்டுகளில் தோல்வியடைந்து அதனை மூடியது.

கூகுள் நிறுவனத்தின் ‘ஆரியோ’ ஆப் மற்றும் Uber Eats போன்ற பல ஜாம்பவான்களும் இங்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வெளியேறியுள்ளனர். இந்த மாபெரும் சவால்களை எல்லாம் முறியடித்து, ஸ்விக்கி மற்றும் சொமேட்டோ நிறுவனங்களுக்கு பிளிப்கார்ட் டஃப் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related News

Latest News