நகைக்கடன் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையின் உச்சவரம்பை 10,000 ரூபாயாக உயர்த்தித் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் இந்த புதிய சலுகை, பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

முன்னதாக, தங்க நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக 7,000 ரூபாய் என்ற அளவில் நகைக்கடன் வழங்கப்பட்டு வந்தது.

தற்போது, ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகை, நகையின் சந்தை மதிப்பில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சமாக 10,000 ரூபாய், இதில் எது குறைவோ அந்தத் தொகையாக வழங்கப்படும் எனத் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நகைக்கடனுக்கான வட்டி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 13 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் (DCCB) மற்றும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் (PACCS) மூலம் வழங்கப்படும் நகைக்கடன்களின் வட்டி விகிதங்களில் இருந்த வேறுபாட்டைக் களையவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் பொதுமக்களுக்கு வழங்கும் நகைக்கடன் வட்டியை விட, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்குக் குறைந்தபட்சம் 1.25% குறைவான வட்டியில் கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேசமயம், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் வட்டி விளிம்பு வரம்பு 2.25 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உயர்த்தப்பட்ட புதிய கடன் உச்சவரம்பு, இனி புதிதாக வழங்கப்படும் நகைக்கடன்களுக்கும், தற்போது புதுப்பிக்கப்படும் பழைய நகைக்கடன்களுக்கும் முழுமையாகப் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, அவசரத் தேவைக்குப் பணம் தேவைப்படுவோருக்குப் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News