‘பேரழிவு போருக்கு ஈரான் தயார்!’ அமெரிக்காவை அலறவிட்ட ஈரானின் ‘Doomsday’ அலெர்ட்!

“எங்கள் மீது அமெரிக்கா அடுத்த தாக்குதலைத் தொடங்கினால், அது உலகை அழிக்கும் ‘டூம்ஸ்டே வார்’ (Doomsday War) என்ற இறுதி யுத்தமாக இருக்கும். அந்தப் போரைச் சந்திக்கவும் நாங்கள் முழுமையாகத் தயாராகவே உள்ளோம்!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது ஈரான்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான போர் பதற்றம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. முடக்கி வைக்கப்பட்டுள்ள ‘ஹோர்முஸ் ஜலசந்தியை’ மீண்டும் திறப்பதற்கும், அமெரிக்காவுடன் அணுசக்தி பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கும் ஈரான் தரப்பில் ஒரு 7 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்து விட்டார். அதுமட்டுமில்லாமல், அமெரிக்காவில் நடைபெறவுள்ள இடைக்காலத் தேர்தலுக்குப் பிறகு, ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் ரகசியமாகத் திட்டமிட்டுள்ள தகவலும் வெளியானது.

டிரம்பின் இந்த மிரட்டலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, அமெரிக்காவின் பிரபல ‘என்.பி.சி’ (NBC) தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி ஒரு பகிரங்கமான எச்சரிக்கையை விடுத்துள்ளார். “அமெரிக்காவின் தேர்தலைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை, எங்களின் நாட்டு நலன் மட்டுமே எங்களுக்கு முக்கியம். அவர்கள் மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால், அதனைச் சந்திக்க நாங்கள் முழுமையாகத் தயாராக இருக்கிறோம். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருக்கிறது, போரைத் தேர்ந்தெடுப்பதா அல்லது அமைதியைத் தேர்ந்தெடுப்பதா என்பதை டிரம்ப் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “அமெரிக்காவால் சட்டவிரோதமாக முடக்கப்பட்டுள்ள எங்களின் சொத்துக்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். சர்வதேச சந்தையில் எங்கள் நாட்டு எண்ணெய்யை விற்க எங்களை அனுமதிக்க வேண்டும். இது நடந்தால் மட்டுமே ஹோர்முஸ் ஜலசந்தியை நாங்கள் மீண்டும் திறப்போம்,” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். ஆனால், இந்த ஒப்பந்தத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ள அதிபர் டிரம்ப், “ஈரான் போரில் மிக மோசமாகத் தோற்றுக் கொண்டிருக்கிறது, அதனால்தான் அவர்கள் உடனடியாக ஒப்பந்தம் போடத் துடிக்கிறார்கள்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், இந்தப் போரில் மிக விரைவில் அமெரிக்கா மாபெரும் வெற்றிபெறும் என்றும், போர் முடிந்தவுடன் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் குறையும் என்றும் டிரம்ப் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், எந்த நேரத்திலும் போர் வெடிக்கலாம் என ஈரான் வெளிப்படையாக எச்சரித்திருப்பது, மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு மாபெரும் ‘இறுதி யுத்தம்’ நடைபெறுவதற்கான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

Related News

Latest News