‘காசாவை மொத்தமாக விழுங்க போகும் இஸ்ரேல்!’ அலறும் அரபு நாடுகள்!

“எங்கள் மீது மீண்டும் போர் தொடுக்க நினைக்கும் எதிரிகளுக்கு, ஒரு மாபெரும் பாடத்தைப் புகட்ட வேண்டும். அதற்காகக் காசாவின் முக்கியப் பகுதிகளையும், தெற்கு லெபனான் பகுதிகளையும் இஸ்ரேலுடன் அதிகாரப்பூர்வமாக இணைக்க வேண்டும்” என இஸ்ரேலின் நிதி அமைச்சர் விடுத்துள்ள அதிரடியான கோரிக்கை, அரபு நாடுகள் மத்தியில் மாபெரும் போர்ப்பதற்றத்தை உருவாக்கியுள்ளது!

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையிலான போர் தொடங்கி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில், இஸ்ரேலின் வலதுசாரி நிதி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) ஒரு அதிர்ச்சிகரமான பேட்டியை அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், ஒரு போர் எங்கிருந்து தொடங்கியதோ, மீண்டும் அதே இடத்திலேயே அந்தப் போர் முடிவடைந்தால், எதிரிகள் மீண்டும் நம்மைத் தாக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன நிச்சயம் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவின் முழுப் பகுதியையும், லெபனானில் உள்ள லிட்டானி நதி வரையிலான நிலப்பரப்பையும் இஸ்ரேலின் சொந்த நிலமாக அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுமட்டுமில்லாமல், சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பாக இஸ்ரேலியர்கள் பல ஆண்டுகளாகக் குடியேறி வரும் ‘மேற்குகரை’ (West Bank) பகுதி மீதும், ஒரு முழுமையான போரைத் தொடங்க வேண்டும் என்று அவர் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாலஸ்தீன நிர்வாகத்தை அங்கு முழுமையாக வேரறுக்க வேண்டும் என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார். இஸ்ரேலில் வருகின்ற அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், வலதுசாரி அமைப்புகளின் வாக்குகளைக் குறிவைத்தே அமைச்சர் இப்படி ஒரு சர்ச்சைக்குரிய பேட்டியை அளித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

ஸ்மோட்ரிச்சின் இந்த விபரீதமான பேட்டிக்குப் பாலஸ்தீன அரசு மிகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியர்களின் இந்தத் திட்டம், சுதந்திரப் பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை முற்றிலுமாக அழிக்கும் ஒரு சதிச் செயல் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே, கடந்த ஒரு வருடத்தில் மேற்குகரை பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவமும் குடியேற்றவாசிகளும் நடத்திய தாக்குதல்களில் ஆயிரத்து நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளனர்.

சர்வதேசச் சட்டங்களுக்கு எதிராக, சுமார் ஐந்து லட்சம் இஸ்ரேலியர்கள் தற்போது மேற்குகரை பகுதிகளில் ஆக்கிரமித்துக் குடியேறியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என உலக நாடுகள் பலமுறை எச்சரித்தும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அதனைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறார். தற்போது ஒரு சுதந்திரப் பாலஸ்தீன நாட்டை உருவாக்குவதையே ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் இஸ்ரேலியத் தலைவர்களின் இந்தத் தீவிரமான நிலைப்பாடு, மத்திய கிழக்கு நாடுகளில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகளை முற்றிலுமாகத் தகர்த்தெறிந்துள்ளது.

Related News

Latest News