இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான அபுதாபிக்கு ரகசியப் பயணம் மேற்கொண்டு, அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து அவசர பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த உயர்நில சந்திப்பு குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகமோ அல்லது அமீரக வெளியுறவுத் துறையோ அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை.
2023 அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய கொடூர தாக்குதலுக்கு 10 நாட்களுக்கு முன்பே, ஹமாஸ் ஒரு பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறது என்று அமீரக அதிபர் ஷேக் முகமது, நெதன்யாகுவிற்கு எச்சரிக்கை விடுத்ததாக ‘ஹாரெட்ஸ்’ என்ற இஸ்ரேலிய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால் அந்த எச்சரிக்கையை நெதன்யாகு தனது உளவு அமைப்புகளுக்குத் தெரிவிக்கத் தவறிவிட்டார் என்ற சர்ச்சை வெடித்துள்ள சூழலில், இந்த ரகசிய சந்திப்பு நடந்துள்ளது.
இந்த நாளிதழ் செய்தியை முற்றிலும் மறுத்துள்ள நெதன்யாகு, ஊடகம் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டியுள்ளார். மேலும், வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில், அக்டோபர் 7 தாக்குதலின் பாதுகாப்பு வீழ்ச்சிக்கு நெதன்யாகுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில்தான் அமீரகத்திற்கு அவர் அவசர பயணம் மேற்கொண்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டு எட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆபிரகாம் உடன்படிக்கை’ மூலம் இஸ்ரேலும் ஐக்கிய அரபு அமீரகமும் தூதரக உறவுகளைத் தொடங்கின. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான உறவைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தனது தூதரகப் பலத்தை அமீரகம் அதிகரித்து வருகிறது.
ஈரான் போர் தீவிரமடைந்து வரும் இந்த வேளையில், அரபு நாட்டின் அதிபரை இஸ்ரேல் பிரதமர் ரகசியமாகச் சந்தித்துப் பேசியுள்ளது மத்திய கிழக்கு அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.
