துருப்பிடித்து கரை ஒதுங்கிய ‘USS ஆபிரகாம் லிங்கன்’! அமெரிக்காவின் கடல் ராட்சதனுக்கு வந்த சோதனை!

அமெரிக்காவின் கடல் வலிமைக்கு அடையாளமாகத் திகழும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) விமானம் தாங்கி போர்க்கப்பல், சுமார் 286 நாட்களுக்குப் பிறகு தாய்லாந்து துறைமுகத்திற்கு வந்து சேர்ந்துள்ள விதம், உலக நாடுகளைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் சான் டியாகோவிலிருந்து புறப்பட்டபோது ஒரு புதிய போர் வீரன் போலக் காட்சியளித்த இந்த ராட்சதக் கப்பல், இப்போது தலை முதல் கால் வரை துருப்பிடித்து, பார்ப்பதற்கே பரிதாபமான நிலையில் காட்சியளிக்கிறது.

வளைகுடா பிராந்தியத்தில் ஈரானுக்கு எதிரான நீண்ட கால முற்றுகை மற்றும் நேரடிப் போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதே இந்தக் கப்பலின் இந்த நிலைக்கு முதன்மைக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

தொடர்ச்சியாக 286 நாட்கள் நடுக்கடலில் பணியில் இருந்த இந்தக் கப்பலின் 1,100 அடி நீளமுள்ள மேல்பகுதி முழுவதும் கடல் நீரினால் துரு ஏறிப் போய்விட்டது.

பொதுவாக 60 நாட்களுக்கு மேல் தொடர்ந்து கடலில் இருக்கும் கப்பல்களில் இது போன்ற துரு ஏற்படுவது இயல்புதான் என்றாலும், ஆபிரகாம் லிங்கன் சந்தித்திருப்பது ஒரு மிகக் கடுமையான பாதிப்பாகும்.

இந்தக் கப்பலில் உள்ள துருவை முழுமையாக அகற்றி, மீண்டும் பழைய பொலிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால், சுமார் 30 நாட்கள் தொடர் பராமரிப்புப் பணிகள் தேவைப்படும் என ராணுவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தாய்லாந்தின் லேம் சாபாங் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்தக் கப்பலில், அவசரப் பணிகள் மட்டும் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

வெறும் துரு என்பது இந்தக் கப்பலின் வெளிப்புறப் பிரச்சினை மட்டுமே; ஆனால் அதன் உட்புறத்தில் இதை விடப் பெரிய சிக்கல்கள் நிலவி வருவதாகத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீண்ட நாட்களாகக் கடலிலேயே இருந்ததால், வீரர்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகப் பணியாற்றும் வீரர்களின் மன உறுதி (Morale) வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நீண்ட பயணத்தின் போது ஒரு வீரர் கடலில் விழுந்து மாயமான சம்பவமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு பாதிப்புகள் மற்றும் வீரர்களின் மன உளைச்சலுக்கு மத்தியிலும், அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதனை ஒரு பெரிய விஷயமாகக் கருதாமல், வழக்கமான ராணுவ நடவடிக்கை என்றே கடந்து போயுள்ளார்.

தற்போது தாய்லாந்தில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு இதுதான் முதல் முறையான ஓய்வு மற்றும் புத்துணர்ச்சி அளிக்கும் பயணமாகும்.

போர்க்களத்தில் பல மாதங்களாகப் போராடிய இந்த வீரர்களுக்கு இது ஒரு தற்காலிக நிம்மதியைத் தந்தாலும், மீண்டும் இந்தக் கப்பல் முழுமையான போர்த்திறனைப் பெறுவதற்கு இன்னும் பல வாரங்கள் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் போர்க்கப்பலே இவ்வளவு பாதிப்புகளைச் சந்தித்துள்ளது, நவீனப் போர்க்கால சூழல் எவ்வளவு கடினமானது என்பதை உலகிற்கு உணர்த்தியுள்ளது.

Related News

Latest News