தமிழகத்தில் இன்று (செப். 15) 9 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் தென்மேற்கு வங்கக்கடல் வரை தமிழகத்தின் வழியாக சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதால் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக்கூடும். மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (செப். 16) நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கரூர், திருச்சி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மாலை அல்லது இரவு சில பகுதிகளில் இடியுடன் மிதமான மழை பெய்யலாம். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
மேலும், தெற்கு வங்கக்கடலில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இன்று அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
