‘எல்லாரும் எனக்கு பணம் குடுங்க!’- மொத்த உலகையும் அலறவிட்ட ‘டிரம்ப்’!

உலக நாடுகளின் எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்யும் மிக முக்கியமான கடல் வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பதற்காக, சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்கப் படைகள் உயிரைப் பணயம் வைத்து இந்த முக்கியமான பாதையைப் பாதுகாத்து வரும் நிலையில், இதனால் பலன் அடையும் மற்ற நாடுகள் எந்தவித உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்ப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தப் போர் பதற்றங்கள் முடிவுக்கு வந்த பிறகு, இதற்கான செலவுகளை அமெரிக்காவிடம் அந்த நாடுகள் திருப்பித் தர வேண்டும் என்பதில் ட்ரம்ப் மிகவும் உறுதியாக உள்ளார்.

தலைமுறை தலைமுறையாக அமெரிக்கா மற்ற நாடுகளுக்காகவே இத்தகைய பாதுகாப்புகளை வழங்கி வருவதாகவும், ஆனால் இப்போது அந்த நிலை மாற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகத் தடையின்றி கச்சா எண்ணெய் செல்வதை அமெரிக்கக் கடற்படை உறுதி செய்து வரும் வேளையில், ஈரானுடனான ராணுவ மோதலில் அமெரிக்கா ஏற்கனவே மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டதாக ட்ரம்ப் மார்தட்டியுள்ளார்.

ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைச் சிதைத்து, அவர்களின் அணு ஆயுதத் திட்டங்களை முடக்கிவிட்டதாக அவர் கூறினாலும், அமெரிக்க ராணுவத் தளவாடங்கள் பெருமளவில் செலவாகி வருவது குறித்து அந்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் கவலை தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தை அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலோடும் ட்ரம்ப் இணைத்துப் பேசியுள்ளார். அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வுக்குத் தனது நிர்வாகம் காரணமல்ல என்றும், ஜோ பைடன் நிர்வாகத்தின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என்றும் அவர் சாடியுள்ளார்.

ஈரானுடனான மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும், அதன் பிறகு அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் ராக்கெட் வேகத்தில் சரிந்து, பாறையைப் போலக் கீழே விழும் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

இதற்கிடையில், ஈரான் நாடு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருப்பதாகவும், அதனைத் தான் பரிசீலித்து வருவதாகவும் ட்ரம்ப் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வணிகத்திற்கு உயிர்நாடியாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் ஆதிக்கத்தை அமெரிக்கா முற்றிலுமாக நிராகரித்துள்ளது.

இந்தச் சூழலில், ட்ரம்ப் கோரும் இந்த ‘பாதுகாப்பு கட்டணம்’ அல்லது இழப்பீடு என்பது, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஒரு புதிய ராஜதந்திர நெருக்கடியை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

வல்லரசு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்தப் பொருளாதார மற்றும் ராணுவப் போர், இறுதியில் உலக நாடுகளின் எரிசக்திச் சந்தையை எத்தகைய திசைக்கு இட்டுச் செல்லும் என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக் குறியாகவே உள்ளது.

Related News

Latest News