தங்கம் வாங்குவோருக்கு முக்கிய செய்தி! விலையில் அடுத்து நடக்க போறது ‘இதுதான்’!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை சற்றே குறைந்து, ஒரு அவுன்ஸ் 4,150 டாலருக்கு கீழ் சரிந்து வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்க அரசு பத்திரங்களின் வட்டி விகிதம் கடந்த 2002-ஆம் ஆண்டிற்குப் பிறகு இல்லாத அளவிற்கு 5.35 சதவீதமாக உயர்ந்துள்ளதும், அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மேலும் வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற தகவலுமே இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணமாகும்.

இந்திய கமாடிட்டி சந்தையிலும் 10 கிராம் தங்கம் விலை 1.5 லட்சத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித குழப்பம் நிலவுகிறது.

ஆனால், இந்த சரிவு தற்காலிகமானதுதான் என்றும், தங்கத்திற்கான அடிப்படை ஆதரவு விலை ஒருபோதும் உடையாது என்றும் சர்வதேச நிதி நிபுணர்கள் அறுதியிட்டு கூறுகின்றனர்.

அமெரிக்காவின் பிரபல அமெரிக்கன் ஹார்ட்ஃபோர்ட் கோல்ட் (American Hartford Gold) நிறுவனத்தின் தலைவர் மேக்ஸ் பேக்கர் (Max Baecker) இதுகுறித்து தெரிவிக்கையில், உலக நாடுகளின் கடன் சுமை அதிகரித்து வருவதும், புவிசார் அரசியல் பதற்றங்களுமே தங்கத்தின் தேவையை தொடர்ந்து தக்கவைத்து வருகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் வட்டி விகிதங்கள் உயர்ந்தாலும், உலகின் பல நாட்டு மத்திய வங்கிகள் தங்களது நிதி இருப்புக்காக அமெரிக்க டாலரை மட்டும் நம்பியிருக்காமல், தங்கத்தை தொடர்ந்து வாங்கி குவித்து வருகின்றன.

எந்தவொரு நாட்டின் பொருளாதார நெருக்கடியிலும் தங்கத்தின் மதிப்பு அழியாது என்பதால், மத்திய வங்கிகளின் இந்த நீண்டகால முதலீடு, தங்கத்தின் விலையை பெரிய அளவில் வீழ்ச்சியடைய விடாமல் பாதுகாக்கும் அரணாக விளங்குகிறது.

மேலும், அமெரிக்கா வட்டி விகிதங்களை உயர்த்தும்போது அது பொருளாதார மந்தநிலையை உருவாக்க வாய்ப்புள்ளது. அத்தகைய சூழலில், பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் பக்கம் மீண்டும் முதலீடுகள் குவியத் தொடங்கும்.

இதைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நிதி நிறுவனமான ஜே.பி. மோர்கன் வெளியிட்ட கணிப்பின்படி, வரும் 2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 6,300 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, தற்போதைய இந்த விலை சரிவு தற்காலிகமானதே தவிர, தங்கத்தின் மீதான முதலீட்டு மதிப்பு என்றும் குறையாது என்பதுதான் சந்தை நிபுணர்களின் இறுதியான கருத்தாக உள்ளது.

Related News

Latest News