தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 15ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
செப்டம்பர் 16ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும். 17ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தஞ்சாவூர், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
18ஆம் தேதி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழையும், 19ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும். 20ஆம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மாலை அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
