இந்தியாவில் டீக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால் வரை இன்று அனைவரது கைகளிலும் இருப்பது UPI ஸ்கேன் வசதிதான். மின்னல் வேகத்தில் நடக்கும் இந்தப் பணப் பரிமாற்றம் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தற்போது ஒரு மிக முக்கியமான விளக்கத்தை அளித்துள்ளது.
இதன்படி, 2,000 ரூபாய் வரையிலான அனைத்து UPI பரிவர்த்தனைகளுக்கும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது.
செப்டம்பர் 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணையின்படி, எந்த வங்கியோ அல்லது பேமெண்ட் நிறுவனமோ உங்களிடமிருந்து நேரடியாவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு பைசா கூடக் கட்டணமாக வசூலிக்க முடியாது.
இதே பாதுகாப்பு மற்றும் சலுகை ரூபே (RuPay) டெபிட் கார்டு மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் பொருந்தும். அப்படியானால், 2,000 ரூபாய்க்கு மேல் நாம் பணம் அனுப்பினால் கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்குப் பதில் ‘இல்லை’ என்பதுதான்.
நீங்கள் 5,000 ரூபாயோ அல்லது 10,000 ரூபாயோ UPI மூலம் செலுத்தினாலும், ஒரு சாமானிய வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிலிருந்து எவ்விதத் கூடுதல் தொகையும் தானாகக் கழியாது.
மத்திய அரசு தற்போது உருவாக்கியுள்ள புதிய சட்ட விதிகள் என்பது, இந்தப் பணப் பரிமாற்றத்தைச் செயல்படுத்தும் வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கான ஒரு வழிகாட்டுதலே தவிர, பொதுமக்களைப் பாதிப்பதல்ல.
குறிப்பாக, பெரிய வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய ‘மெர்ச்சண்ட் டிஸ்கவுண்ட் ரேட்’ (MDR) என்ற கட்டணத்திற்கான சட்ட ரீதியான அடித்தளத்தையே அரசு இப்போது அமைத்துள்ளது.
UPI தொழில்நுட்பம் இன்று அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. கடந்த 2017-ல் வெறும் 44 வங்கிகளுடன் தொடங்கிய இந்தச் சேவை, இன்று 741 வங்கிகளுடன் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 2,366 கோடி பரிவர்த்தனைகள் நடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய கட்டமைப்பைப் பராமரிக்கவும், சைபர் குற்றங்களைத் தவிர்க்கவும் தேவைப்படும் நிதியைத் திரட்டவே இத்தகைய புதிய கொள்கை முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
ஆனால், “மக்களுக்கு UPI சேவை எப்போதும் இலவசமாகவே இருக்கும்” என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. எனவே, பொதுமக்கள் எவ்வித அச்சமுமின்றித் தங்களின் அன்றாடப் பணப் பரிமாற்றங்களைத் தொடரலாம்.
இதற்கிடையில், இன்டர்நெட் வசதி சரியாக இல்லாத கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிதாக்க ‘UPI Tap & Pay’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது மொபைல் டேட்டா இல்லாத நேரத்திலும் போனைத் தட்டுவதன் மூலம் பணம் செலுத்த உதவும்.
