‘கோப்பையெல்லாம் தேவை இல்ல !’- பாகிஸ்தானுக்கு மீண்டும் ‘BCCI’ கொடுத்த மரண அடி!

ஆசியக் கோப்பையை வென்றும் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி! கடந்த 12 மாதங்களில் இது இரண்டாவது முறையாக அரங்கேறியுள்ளது. இந்தச் சர்ச்சையின் மையமாக இருப்பது ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான மோஷின் நக்வி.

இவர் ஒரு கிரிக்கெட் நிர்வாகி மட்டுமல்ல, பாகிஸ்தானின் உள்துறை அமைச்சராகவும் இருப்பதால், இந்தியாவுடனான அரசியல் பதற்றங்கள் இப்போது கிரிக்கெட் மைதானத்திலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

சமீபத்தில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டம் வென்றபோது, மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையைப் பெற ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி மறுத்துவிட்டது.

இது கோப்பைக்கு எதிரான போராட்டம் அல்ல, கோப்பையை வழங்குபவருக்கு எதிரான எதிர்ப்பு. கடந்த 2025-ஆம் ஆண்டு துபாயில் நடந்த ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இதே போன்ற ஒரு சம்பவம் நடந்தது.

அப்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, மோஷின் நக்வியின் இந்திய எதிர்ப்பு நிலைப்பாடு மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தல்களைக் காரணம் காட்டி, அவரிடம் இருந்து கோப்பையைப் பெற மறுத்தது. இதனால் கோபமடைந்த நக்வி, கோப்பையுடன் மைதானத்தை விட்டு வெளியேறினார்.

இன்றுவரை அந்த கோப்பை இந்தியாவிற்கு வந்து சேரவில்லை. இப்போது, அதே கொள்கை நிலைப்பாட்டை மகளிர் அணியும் பின்பற்றியுள்ளது.

இந்த நிகழ்வின் பின்னணியில் ஒரு சுவாரசியமான ராஜதந்திர நாடகம் நடந்துள்ளது. இந்திய அணி மோஷின் நக்வியிடம் இருந்து கோப்பையை வாங்காது என்று பிசிசிஐ முன்கூட்டியே ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்குத் தகவல் தெரிவித்துவிட்டது.

அதற்குப் பதிலாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் துணைத் தலைவரான காலித் அல் ஜரூனி கோப்பையை வழங்கலாம் என்று ஒரு மாற்று யோசனையையும் பிசிசிஐ முன்வைத்தது.

ஆனால், அந்த யோசனையை மோஷின் நக்வி நிராகரித்துவிட்டதால், இந்திய அணி ஒட்டுமொத்தப் பரிசளிப்பு விழாவையும் புறக்கணிக்க முடிவு செய்தது.

“எல்லை தாண்டிய கூலிப்படையினரால் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவே இந்த முடிவை எடுத்தோம்” என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார்.

“என்றாவது ஒருநாள் இரண்டு கோப்பைகளையும் நாங்கள் திரும்பப் பெறுவோம். ஆனால், இப்போது எங்களது நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கோப்பையை வெல்வதை விட, நாட்டின் தன்மானத்தைக் காப்பதுதான் பெரிது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தச் செயல் மூலம் உணர்த்தியுள்ளது.

Related News

Latest News