வீடு கட்ட போறீங்களா? பதிவுத்துறை வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் வீடு அல்லது கட்டிடத்துடன் கூடிய மனையைப் பதிவு செய்யத் திட்டமிடுபவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.

கட்டிடப் பதிவின் போது ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கவும், பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தவும் பதிவுத்துறைத் தலைவர் அதிரடியான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

வழக்கமாக, ஒரு கட்டிடத்தைப் பதிவு செய்யும்போது, அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்த பிறகே (Field Inspection) பத்திரம் திரும்பத் தரப்படும்.

ஆனால், இனி ஆவணதாரர்கள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளின் கீழ் ‘உறுதிமொழிக் கடிதம்’ அளித்தால், களப்பணி இல்லாமலேயே தங்களின் பத்திரத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தப் புதிய விதிகளின்படி, உங்கள் கட்டிடத்தின் பரப்பளவு 2,500 சதுர அடிக்குக் குறைவாக இருந்து, அதன் மதிப்பு 1 கோடி ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், நீங்கள் அளிக்கும் சுயசான்று மதிப்பு அல்லது பொதுப்பணித் துறையின் தற்போதைய விலைப்பட்டியல் மதிப்பு ஆகிய இரண்டில் எது அதிகமோ, அதற்கான முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

இவ்வாறு செலுத்த நீங்கள் ஒப்புக்கொண்டு உறுதிமொழி அளித்தால், அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்யாமலேயே உங்கள் பத்திரம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப்படும்.

2,500 சதுர அடிக்கு அதிகமான கட்டிடங்களுக்கும் இதே விதி பொருந்தும், ஆனால் மதிப்பு 1 கோடிக்குக் குறைவாக இருக்க வேண்டும்.

ஒருவேளை கட்டிடத்தின் மதிப்பு 1 கோடி ரூபாய்க்கு மேல் 5 கோடி ரூபாய்க்குக் கீழ் இருந்தால், அங்கீகரிக்கப்பட்ட கட்டிட மதிப்பீட்டாளரின் அறிக்கை அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

அந்த மதிப்பீட்டாளர் அளிக்கும் மதிப்பு அல்லது அரசின் விலைப்பட்டியல் இதில் எது அதிகமோ அதைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இதேபோல், 5 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள சொத்துகளுக்கும் இதே நடைமுறை பின்பற்றப்படும். இதன் மூலம் பெரிய மதிப்பிலான சொத்துகளைப் பதிவு செய்பவர்கள், நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் தங்களின் பணிகளை விரைவாக முடிக்க முடியும்.

அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டி முடிக்கப்படாத கட்டிடங்களுக்கும் இந்த வசதி உண்டு. அடுக்குமாடி குடியிருப்பில் 2,500 சதுர அடிக்குக் குறைவாக இருந்தால் சுயசான்று மதிப்பிலேயே பத்திரம் திரும்பத் தரப்படும்.

அதேபோல், கட்டுமானத்தில் இருக்கும் கட்டிடங்களுக்குச் சுயசான்று மதிப்பு அல்லது அரசு நிர்ணயித்த மதிப்பில் எது அதிகமோ அதைச் செலுத்தி ஆய்வின்றிப் பத்திரத்தைப் பெறலாம்.

ஒருவேளை, ஆவணதாரர் அதிகபட்ச மதிப்பை ஏற்க மறுத்தால் மட்டுமே, அந்த ஆவணம் அதிகாரிகளின் நேர் ஆய்வுக்கு அனுப்பப்படும்.

இந்த எளிய நடைமுறை பொதுமக்களின் நேரத்தைச் சேமிப்பதோடு, பதிவுத்துறையில் வெளிப்படைத்தன்மையையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News