தங்கம் வாங்கும் திட்டத்தில் இருக்கிறீர்களா? அல்லது கையில் இருக்கும் தங்கத்தை விற்கலாமா என்று யோசிக்கிறீர்களா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்.கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச அளவில் தங்கம் சார்ந்த இடிஎஃப் (Gold ETF) எனப்படும் முதலீட்டு நிதிகளில் சுமார் 18 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் குவிந்துள்ளன.
வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, இது வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய மாதாந்திர முதலீடாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி அதிக அளவில் படையெடுத்துள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணமாக சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி விகிதக் கொள்கைகள் குறித்த எதிர்பார்ப்புகளுமே பார்க்கப்படுகின்றன.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, அங்கு நிலவும் நிதி நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகள் காரணமாகப் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். மறுபுறம் அமெரிக்காவில் வட்டி விகிதங்களில் ஏற்படப்போகும் மாற்றங்களும், ஜப்பான் நாட்டின் கரன்சி தொடர்பான தலையீடுகளும் முதலீட்டாளர்களைத் தங்கம் பக்கம் திசைதிருப்பியுள்ளது.
ஆசியாவிலும், குறிப்பாக சீனாவில் தங்கத்தின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதால், அங்கேயும் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. தற்போது உலகளவில் தங்கம் சார்ந்த இந்த முதலீட்டு நிதிகளின் மொத்த மதிப்பு 615 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது, இது தங்கத்தின் மீதான உலகளாவிய மோகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
இவை அனைத்தும் சாதாரண மக்களை, அதாவது ஒரு சாமான்ய நுகர்வோரை எப்படிப் பாதிக்கும் என்ற கேள்வி இங்கு முக்கியமானது. சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு முதலீட்டுப் பொருளாகப் பார்க்கப்படும்போது, அதன் தேவை அதாவது டிமாண்ட் அதிகரிக்கும்.
பெரிய நிறுவனங்களும் வங்கிகளும் கோடிக்கணக்கில் தங்கத்தை வாங்கிக் குவிக்கும்போது, சந்தையில் தங்கத்தின் கையிருப்பு குறைந்து விலை தானாகவே உயரத் தொடங்கும்.
நாம் கடைகளில் வாங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை என்பது சர்வதேச சந்தையின் விலையை அடிப்படையாகக் கொண்டது. எனவே, உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கத்தில் பணத்தைக் கொட்டும் போது, ஒரு சாதாரண குடும்பம் தனது தேவைக்காக வாங்கும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கூட எட்டாக்கனியாக மாற வாய்ப்புள்ளது.
தற்போதைய நிலவரப்படி, சர்வதேசச் சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 4,500 டாலருக்குக் கீழேயே வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்காவின் பணவீக்க தரவுகள் மற்றும் வட்டி விகித முடிவுகளைப் பொறுத்தே தங்கம் விலையின் அடுத்தக்கட்ட நகர்வு இருக்கும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
ஒருவேளை தங்கம் விலை 4,500 டாலரைத் தாண்டி நிலைபெற்றால், அது மேலும் ஒரு புதிய உச்சத்தை நோக்கிச் செல்லக்கூடும். அதேசமயம், தங்கம் விலை குறையும்போது அது தற்காலிகமான ஒரு வாய்ப்பாகவே பார்க்கப்பட வேண்டும்.
எனவே, நீங்கள் நகை வாங்கவோ அல்லது தங்கத்தில் முதலீடு செய்யவோ திட்டமிட்டிருந்தால், சர்வதேச சந்தையில் நடக்கும் இதுபோன்ற மாற்றங்களை உன்னிப்பாகக் கவனிப்பது மிகவும் அவசியம். பாதுகாப்பான முதலீடாக இருந்தாலும், சரியான நேரத்தில் திட்டமிட்டு செயல்படுவதே புத்திசாலித்தனம்.
