மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான எட்டாவது ஊதியக் குழுவின் பணிகள் தற்போது நாடு முழுவதும் சூடுபிடித்துள்ளன.
நீதியரசர் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஊதியக் குழு, பல்வேறு நகரங்களில் தனது கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர் அமைப்புகள் தங்களின் மிக முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இதில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைதான்.
தங்களின் வாழ்நாள் உழைப்பிற்கான சமூகப் பாதுகாப்பாக இதை ஊழியர்கள் முன்னிறுத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட மற்றுமொரு அதிரடியான கோரிக்கை என்னவென்றால், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை 68,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பதாகும்.
அத்துடன், பத்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுவதற்குக் காத்திருக்காமல், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதியத்தை அவ்வப்போது மாற்றியமைக்க ஒரு நிரந்தர வழிமுறையை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதியதாரர்களைப் பொறுத்தவரை, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகையை உயர்த்துவதோடு, ராணுவத்தில் நடைமுறையில் உள்ள ‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்’ திட்டத்தை சிவில் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ளனர்.
இருப்பினும், இந்தக் கோரிக்கைகளில் சில சட்ட ரீதியான சிக்கல்கள் இருப்பதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, ராணுவத்தைப் போலல்லாமல், சிவில் பணிகளில் ஒவ்வொரு துறையும் வெவ்வேறு பணிச்சூழலைக் கொண்டிருப்பதால், அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வருவது புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கலாம் என்று சட்ட நிபுணர் அம்ரிதா டோங்க் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2026-க்கு முன் ஓய்வு பெற்றவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் ஊதிய உயர்வை முறையாக அமல்படுத்துவது குறித்தும் தெளிவான சட்ட விதிகள் தேவைப்படுகின்றன. இந்த ஊதியக் குழுவின் முடிவுகள் மத்திய அரசுக்கு மட்டுமல்லாமல், மாநில அரசு ஊழியர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமையும் என்பதால், இதில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.
2025 நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த எட்டாவது ஊதியக் குழுவின் இறுதி அறிக்கை, வரும் 2027 ஆம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையைத் தொடர்ந்து, அடுத்த கட்டமாகக் சண்டிகரில் வரும் செப்டம்பர் 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இந்தக் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அரசு ஊழியர்களின் பதவி உயர்வு பலன்களைத் தீர்மானிக்கும் MACP திட்டம், பெண்களுக்கான சிறப்புச் சலுகைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேவைகள் குறித்தும் இந்தக் குழு விரிவாக ஆராய்ந்து வருகிறது.
இந்த பரிந்துரைகள் அமலுக்கு வரும்போது, அது லட்சக்கணக்கான ஊழியர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பர்க்கப்படுகிறது.
