2026ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி வெளியூரில் வசிக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்குச் செல்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யத் தயாராகி வருகின்றனர்.
குறைந்த கட்டணம், பயண நேரம் மற்றும் பாதுகாப்பு போன்ற காரணங்களால் ரயில் பயணம் பலரது முக்கிய தேர்வாக உள்ளது. ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தீபாவளி பயணத்திற்கான முன்பதிவு விரைவில் தொடங்குகிறது.
நவம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை சொந்த ஊர் செல்ல விரும்புவோர் செப்டம்பர் 6ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 7ஆம் தேதியும், நவம்பர் 7ஆம் தேதி சனிக்கிழமை பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 8ஆம் தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
தீபாவளி நாளான நவம்பர் 8ஆம் தேதி பயணிக்க விரும்புவோர் செப்டம்பர் 9ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். பண்டிகை முடிந்து திரும்பும் பயணத்திற்காக நவம்பர் 9ஆம் தேதிக்கான டிக்கெட்டை செப்டம்பர் 10ஆம் தேதியும், நவம்பர் 10ஆம் தேதிக்கான டிக்கெட்டை செப்டம்பர் 11ஆம் தேதியும் முன்பதிவு செய்யலாம்.
ரயில் டிக்கெட் முன்பதிவு பொதுவாக காலை 8 மணிக்கு தொடங்குவதால், பயணிகள் முன்கூட்டியே தயாராக இருப்பது அவசியம். சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் முன்பதிவு செய்வது பயணிகளுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
