டாஸ்மாக்கில் செப்டம்பர் 1 முதல் புது ரூல்! மதுப்பிரியர்களுக்கு ‘சர்ப்ரைஸ்’!

தமிழகத்தில் உள்ள மதுப்பிரியர்களுக்கு ஒரு முக்கியமான மற்றும் சுவாரசியமான செய்தி வெளியாகியுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் உள்ள 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஒரு புதிய டிஜிட்டல் நடைமுறை அமலுக்கு வரப்போகிறது.

“உங்களுக்குப் பிடித்த பிராண்ட் இல்லையே” என்று இனி வாடிக்கையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை. இதற்காக ‘டிஜிட்டல் இண்டென்ட் சிஸ்டம்’ (Digital Indent System) எனப்படும் புதிய தானியங்கி தேவைப் பட்டியல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்துகிறது.

தற்போது தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூலம் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாய் கிடைத்து வருகிறது.

இவ்வளவு பெரிய வர்த்தகம் நடக்கும் இடங்களில், வாடிக்கையாளர்கள் கேட்கும் குறிப்பிட்ட பிராண்டுகள் பல நேரங்களில் இருப்பில் இருப்பதில்லை.

இதனால் தங்களுக்குப் பிடிக்காத வேறு ஒரு பிராண்டை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டனர். இந்தக் குறையை முற்றிலுமாகப் போக்கவே இந்த புதிய தொழில்நுட்பம் களம் இறக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வரும் இந்த முறையில், ஒவ்வொரு கடையிலும் உள்ள பி.ஓ.எஸ் (POS) எனப்படும் கையடக்கக் கருவிகள் மூலம் அந்தந்த கடையில் முந்தைய நாட்களில் எந்தெந்த பிராண்டுகள் அதிகம் விற்பனையாகின என்ற தரவுகள் சேகரிக்கப்படும். அந்தத் தகவல்களின்

அடிப்படையில், அடுத்த நாளுக்கு அந்தக் கடைக்கு எந்தெந்த மதுபானங்கள் எவ்வளவு தேவை என்பதை அந்த மெஷினே தானாகக் கணக்கிட்டு ஒரு பட்டியலைத் தயாரிக்கும்.

இதனால் ஊழியர்கள் தனியாக அமர்ந்து கணக்குப் போட வேண்டிய அவசியம் இனி இருக்காது. இருப்பினும், உள்ளூர் திருவிழாக்கள் அல்லது விசேஷ காலங்களில் ஏற்படும் கூடுதல் தேவையைக் கருத்தில் கொண்டு, கணினி பரிந்துரைக்கும் அளவை விட 20 சதவீதம் வரை கூடுதலாகச் சரக்குகளைக் கோர கடை மேற்பார்வையாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்டரை உறுதி செய்ய ஊழியர்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணுக்கு ஒரு ஓடிபி (OTP) அனுப்பப்படும். அதனை உள்ளீடு செய்தவுடன், ஆர்டர் விவரங்கள் நேரடியாகத் டாஸ்மாக் கிடங்குகளுக்குச் சென்றடையும். இனி மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு நேரில் சென்று ஆர்டர் கொடுக்க வேண்டிய தேவையும் இருக்காது.

எந்தப் பகுதியில் எந்த பிராண்டுக்கு அதிக மவுசு இருக்கிறது என்பதை இந்தத் தரவுகள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ள முடியும் என்பதால், தட்டுப்பாடின்றி சரக்குகளை விநியோகிக்க முடியும் எனத் தமிழக அரசு நம்புகிறது.

டிஜிட்டல் மயமாகும் இந்த மாற்றத்தால், டாஸ்மாக் கடைகளில் வெளிப்படைத்தன்மை அதிகரிப்பதோடு, வாடிக்கையாளர்களின் நீண்டகாலப் புகாருக்கும் ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News