தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சில மதுபானக் கடைகளில் பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.10 வரை கூடுதலாக வசூலிக்கப்படுவதாக மதுப்பிரியர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், கூடுதல் பணம் வசூலிப்பதாக புகார்கள் தொடர்ந்து வருகின்றன.
இந்நிலையில், டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பான பொதுமக்கள் மற்றும் நுகர்வோரின் புகார்கள், குறைகள் மற்றும் பிரச்சினைகளை எளிதாகத் தெரிவிக்க புதிய வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த சேவை 31.08.2026 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் குறைகளை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-889-2015 மூலம் தெரிவிக்கலாம். மேலும், அதிகாரப்பூர்வ WhatsApp எண் +91-7397720230 மூலமாகவும் புகார் அளிக்கலாம். இந்த வாடிக்கையாளர் சேவை மையம் 24 மணி நேரமும், 7 நாட்களும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், TASMAC-ன் அதிகாரப்பூர்வ Facebook, X, Instagram மற்றும் YouTube சமூக வலைதளங்களிலும் புகார்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம்.
பெறப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். எனவே, மதுபானத்திற்கு கூடுதல் பணம் வசூலிக்கப்பட்டால் பொதுமக்கள் தயக்கமின்றி புகார் அளிக்கலாம்.
