மொபைல் போன் பயன்படுத்தும் இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் மத்திய தொலைத்தொடர்புத் துறையான டிஓடி(DoT) தற்போது ஒரு மாபெரும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
போலியான ஆவணங்களைக் கொடுத்து சிம் கார்டு வாங்குவது, சிம் கார்டுகளை சட்டவிரோதமாகப் பிறருக்கு மாற்றித் தருவது மற்றும் செல்போனின் ஐஎம்இஐ(IMEI) எண்ணை மாற்றுவது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, இனி மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ஐம்பது லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என புதிய தொலைத்தொடர்புச் சட்டம் கடுமையாக எச்சரித்துள்ளது.
சட்டவிரோதமாகச் செயல்படும் இணையக் குற்றவாளிகளை ஒடுக்கும் விதமாகவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தில், பொதுமக்களுக்குத் தெரியாமலேயே அவர்களது அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு மொபைல் கடைக்காரர் சுமார் இருபத்தி ஐந்து போலி சிம் கார்டுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார்.
இந்த தகவல் கண்டுபிடிக்கப்பட்டதும், அந்த மொபைல் கடை உடனடியாக தடை செய்யப்பட்டதோடு, அந்தப் போலி சிம் கார்டுகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
இதுபோன்ற சைபர் குற்றங்களில் சிக்கும் சிம் கார்டுகள் யாருடைய பெயரில் வாங்கப்பட்டிருக்கிறதோ, அவர்களே அந்தக் குற்றத்திற்கு முழுப் பொறுப்பாவார்கள் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.
எனவே, உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஆதார் கார்டைப் பயன்படுத்தி வேறு யாராவது சிம் கார்டு வாங்கியுள்ளார்களா என்பதை, ‘சஞ்சார் சாத்தி’ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நீங்கள் உடனடியாகச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒரு காலத்தில் நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிந்த சிம் கார்டுகளை யாராவது தவறுதலாக எடுத்துப் பயன்படுத்தினால், அதற்கும் நாமே சட்டரீதியாகப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
எனவே, எக்காரணத்தைக் கொண்டும் நமது பெயரில் வாங்கப்பட்ட சிம் கார்டை மற்றவர்களுக்கு வாடகைக்குக் கொடுப்பதையோ, விற்பனை செய்வதையோ அல்லது இரவல் கொடுப்பதையோ முற்றிலுமாகக் தவிர்க்க வேண்டும்.
அதுமட்டுமின்றி, மொபைல் போன்களின் ஐஎம்இஐ எண்ணை மாற்றுவது, இன்டர்நெட்டில் போலியான எண்களைப் பயன்படுத்திப் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான கிரிமினல் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என மத்திய அரசு திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.
