விண்வெளிப் பயணம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நெருப்பைக் கக்கிக் கொண்டு சீறிப்பாயும் ராக்கெட்டுகள்தான். ஆனால், இனி ராக்கெட்டுகள் இல்லாமலேயே ஒரு லிஃப்ட் மூலமாக விண்வெளிக்குச் செல்ல முடிந்தால் எப்படி இருக்கும்? இந்தத் திட்டம் இப்போது நிஜமாகப் போகிறது.
பூமியிலிருந்து விண்வெளி வரை சுமார் 66 ஆயிரம் மைல் நீளத்திற்கு ஒரு பிரம்மாண்டமான விண்வெளி லிஃப்ட்டை (Space Elevator) அமைப்பதற்கான பணிகளில் சர்வதேச விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலைநிறுத்தப்படும் ஒரு வலிமையான கேபிள் வழியாக, மக்கள் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் சிறப்பு வாகனங்கள் விண்வெளிக்குச் செல்லும் என்பதே இந்தத் திட்டத்தின் அடிப்படை.
இந்தத் திட்டத்திற்குப் பல ஆண்டுகளாக இருந்த மிகப்பெரிய சவாலே, பூமியின் ஈர்ப்பு விசையைத் தாங்கிப் பிடிக்கும் அளவிற்கு வலிமையான பொருள் எதுவுமே இல்லை என்பதுதான்.
ஆனால், இப்போது ‘பாலிகிரிஸ்டலின் கிராபீன்’ (Polycrystalline Graphene) என்ற அதீத வலிமையான ஒரு புதிய பொருளை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இது எஃகை (Steel) விட 100 மடங்கு அதிக வலிமை கொண்டது, அதே சமயம் மிக மென்மையானது. தென் கொரியாவில் உள்ள பொறியாளர்கள் ஏற்கனவே சுமார் 1000 மீட்டர் நீளமுள்ள கிராபீன் கட்டமைப்பை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர்.
இது விண்வெளி லிஃப்ட் அமைப்பதற்கான முதல் படியாகப் பார்க்கப்படுகிறது. இந்த விண்வெளி லிஃப்ட் பயன்பாட்டிற்கு வந்தால், விண்வெளிப் பயணம் என்பது இப்போது இருப்பதை விடப் பல மடங்கு மலிவாகவும், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையிலும் மாறும்.
மின்சாரத்தைப் பயன்படுத்தி இந்த லிஃப்ட் இயங்குவதால் வளிமண்டலம் மாசுபடாது. இப்போது ராக்கெட் மூலம் நிலாவிற்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும் என்றால், இந்த லிஃப்ட் மூலம் சரக்குகளை வெறும் 14 மணி நேரத்தில் நிலாவிற்கு அனுப்பிவிட முடியும்.
அதேபோல் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல ஆகும் கால அளவும் பாதியாகக் குறையும். இருப்பினும், இந்தத் திட்டத்தில் விண்வெளிக் குப்பைகளால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் இதற்கான பிரம்மாண்டமான நிதித் தேவைகள் எனப் பல சவால்கள் உள்ளன.
எல்லாமே சரியாக நடந்தால், அடுத்த இரண்டு தசாப்தங்களில் விண்வெளிக்கு லிஃப்ட்டில் செல்லும் கனவு நனவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டுகளின் சகாப்தம் முடிந்து, விண்வெளிப் பாலங்களின் காலம் தொடங்கப் போகிறது.
