சமையலில் அத்தியாவசியப் பொருளாக பயன்படுத்தப்படும் வெங்காயத்தின் விலை கடந்த சில மாதங்களாக குறைந்த நிலையில் இருந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.18 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.70-ஐ தாண்டியுள்ளது.
வரும் நாட்களில் கிலோ ரூ.100 வரை விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
வெங்காய விலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மத்திய அரசு தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை பல்வேறு மாநிலங்களுக்கு ரயில் மூலம் அனுப்பி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் கையிருப்பில் உள்ள 1.21 லட்சம் டன் வெங்காயத்தில் இருந்து ‘கண்டா சிறப்பு எக்ஸ்பிரஸ்’ மூலம் தமிழகத்திற்கும் வெங்காயம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வெங்காயம் வந்தடைந்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் பொதுமக்களுக்கு கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி முதல் நகர்ப்புறங்களில் உள்ள 8,233 நியாய விலைக் கடைகள் மூலம் சுமார் 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்பட உள்ளது.
மேலும், கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் அமுதம் அங்காடிகள் மூலமாகவும் கிலோ ரூ.35க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கட் ரமணன் தெரிவித்துள்ளார். விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இந்த நடவடிக்கை ஓரளவு நிவாரணம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
