தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்யும் பாலுக்கான விலை லிட்டருக்கு மேலும் ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பால் கொள்முதல் விலை ரூ.41-ல் இருந்து ரூ.44 ஆக அதிகரித்துள்ளது.
கால்நடைகளுக்கான பசுந்தீவனம், உலர் தீவனம், தவிடு, புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் இரு தவணைகளாக ஆவின் பால் கொள்முதல் விலை மொத்தம் ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராம அளவிலான தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் பால் வழங்கும் 3.16 லட்சத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பால் கொள்முதல் விலை உயர்வால் ஆவின் நிறுவனத்திற்கு ஏற்படும் கூடுதல் செலவை தமிழக அரசு ஈடு செய்யும் என்றும், இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக ரூ.720 கோடி செலவாகும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்தார்.
