இந்தியர்களுக்கு பெரிய இடியை இறக்கிய ‘அமெரிக்கா’! H-4 விசாவுக்கு வெட்டு வைக்கும் டிரம்ப்!

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியக் குடும்பங்களுக்கு, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் எச்-1பி (H-1B) விசா வைத்திருப்பவர்களுக்கு மீண்டும் ஒரு மிகப்பெரிய சவால் உருவாகியுள்ளது.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம், எச்-4 (H-4) விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பு உரிமையைத் (EAD) தட்டிப் பறிக்கத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.

எச்-1பி விசா பணியாளர்களின் கணவர் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு வழங்கப்படுவதுதான் இந்த எச்-4 விசா.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள புதிய முன்மொழிவு, இந்த விசா பிரிவில் உள்ளவர்களின் வேலை செய்யும் தகுதியை நீக்கப் பரிந்துரைத்துள்ளது.

இந்தத் திடீர் மாற்றம் ஏன் இந்தியர்களைப் படுமோசமாகப் பாதிக்கும் என்பதைப் புள்ளிவிவரங்கள் தெளிவாக உணர்த்துகின்றன. 2015-ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்த இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றவர்களில் சுமார் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அதைவிட ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த வேலை உரிமையைப் பெற்றவர்களில் 94 சதவீதம் பேர் பெண்கள். எனவே, ட்ரம்ப் அரசின் இந்த அதிரடி நடவடிக்கை என்பது ஆயிரக்கணக்கான இந்தியப் பெண்களின் கனவுகளையும், அவர்களின் பொருளாதாரச் சுதந்திரத்தையும் நேரடியாகப் பாதிக்கும் ஒரு விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் இரண்டு பேர் சம்பாதித்தால் மட்டுமே ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் கௌரவமாக வாழ முடியும் என்ற சூழலில், ஒருவரின் வருமானம் மட்டும் பறிபோவது என்பது அந்தக் குடும்பங்களின் நிதிநிலையைத் தலைகீழாக மாற்றிவிடும்.

பல ஆண்டுகளாக அமெரிக்காவில் தங்கிப் பணிபுரிந்து, அங்கேயே நிரந்தரமாகக் குடியேறத் துடிக்கும் இந்தியத் தம்பதியினருக்கு இது ஒரு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமையப்போகிறது.

பெண்களின் தொழில்முறை அனுபவமும், அவர்களின் தனிப்பட்ட முன்னேற்றமும் இந்த முடிவால் கேள்விக்குறியாகி உள்ளது. இருப்பினும், இந்தத் திட்டம் இப்போதே நடைமுறைக்கு வந்துவிடாது என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல். தற்போதைக்கு இது ஒரு ஆலோசனையாக மட்டுமே முன்வைக்கப்பட்டுள்ளது.

இது சட்டமாக மாற வேண்டுமானால், முதலில் அரசாங்க இதழில் வெளியிடப்பட்டு, அதன் மீது பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும். அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும்.

எனவே, ஏற்கனவே எச்-4 விசா மூலம் வேலை செய்துகொண்டிருப்பவர்கள் இப்போதே வேலையை விட்டு நிற்க வேண்டிய அவசியமில்லை.

உண்மையில், ட்ரம்ப் நிர்வாகம் இத்தகைய முயற்சியை எடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த 2017-ம் ஆண்டும் இதே போன்ற ஒரு முயற்சியைத் ட்ரம்ப் மேற்கொண்டார்.

ஆனால் பல சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு 2021-ல் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது மீண்டும் ட்ரம்ப் அதே அஸ்திரத்தைக் கையில் எடுத்திருப்பது அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் ஒருவிதமான அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் வரும் நாட்களில் எத்தகைய திருப்பங்களைச் சந்திக்கும் என்பதை ஒட்டுமொத்த இந்தியச் சமூகமும் ஆவலோடு கவனித்து வருகிறது.

Related News

Latest News