பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே, பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை தனது அரசு கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
சட்டசபையில் பேசிய அவர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக இருப்பதாக தெரிவித்தார். சென்னை மாநகரத்தின் வளர்ந்து வரும் தேவைகள், பயணிகளின் வசதி மற்றும் சரக்கு போக்குவரத்தை கருத்தில் கொண்டு புதிய விமான நிலையம் தேவைப்படுவதாகவும் கூறினார்.
ஆனால், புதிய விமான நிலையத்திற்கான இடம் விவசாய நிலங்களையும் குடியிருப்புகளையும் அதிக அளவில் பாதிக்காத வகையில் தேர்வு செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பரந்தூர் திட்டத்திற்கு எதிராக ஏகனாபுரம் உள்ளிட்ட 12 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நீண்டகாலமாக போராடி வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தார்.
விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே அளித்திருந்த உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில், பரந்தூர் விமான நிலையத்திற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கைவிடப்படுவதாக அறிவித்தார்.
இதற்குப் பதிலாக, விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு குறைந்த பாதிப்பு ஏற்படும் வகையில் மாற்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றின் தொழில்நுட்ப சாத்தியக்கூறுகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி புதிய இடம் விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
இதனிடையே, மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது. டெர்மினல் 3 பணிகள் முடிந்ததும் ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகளை கையாள முடியும். மேலும், வடமேற்கு பகுதியில் புதிய டெர்மினல் 5 அமைக்கப்பட்டால், மொத்த கையாளும் திறன் ஆண்டுக்கு 55 மில்லியன் பயணிகளாக உயரும் என முதலமைச்சர் தெரிவித்தார்.
