பெண்களின் முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்தார். சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை, தாய் மாமன் தங்க மோதிரம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு, அண்ணனின் சீர் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ‘வெற்றி தொலைநோக்கு திட்ட ஆவணம்’ வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் குறுகிய மற்றும் நீண்டகால இலக்குகளுடன் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.
இதனிடையே, வளைகுடா பகுதியில் கடந்த 4 மாதங்களாக நிலவி வரும் போர் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் நிதிச்சுமையை குறைக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
‘அன்னபூரணி சூப்பர் 6’ திட்டத்தின் கீழ், குடும்பத் தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். சிலிண்டரை பதிவு செய்து பெற்ற பிறகு, அதன் விலை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள், சிறு, குறு விவசாயிகள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்பங்கள் உள்ளிட்டோர் பயன்பெறுவர். சுமார் 1.30 கோடி குடும்பங்கள் பயனடையும் இத்திட்டம் வரும் பொங்கல் முதல் செயல்படுத்தப்படும். இதற்காக ஆண்டுதோறும் சுமார் ரூ.4,000 கோடி ஒதுக்கப்படும்.
