அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பலத்த அடி!ஈரான் போரால் மொத்தமாக சரிந்த செல்வாக்கு?

அமெரிக்க அரசியலில் தற்போது ஒரு மிகப்பெரிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் செல்வாக்கு இதுவரை இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்திருப்பது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய ராய்ட்டர்ஸ் மற்றும் இப்சோஸ் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பின்படி, வெறும் 33 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் 64 சதவீத மக்கள் அவரது நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இது கடந்த 2017-ஆம் ஆண்டு ட்ரம்ப் தனது முந்தைய பதவிக்காலத்தில் சந்தித்த மிகக்குறைந்த ஆதரவு நிலைக்கு சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீடித்து வரும் போர் தான் இந்த வீழ்ச்சிக்கு மிகமுக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மீண்டும் அதிபராகப் பொறுப்பேற்ற போது ட்ரம்பிற்கு இருந்த செல்வாக்கு, இந்த ஆண்டு ஈரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு தலைகீழாக மாறியுள்ளது.

இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், தற்போது ஒரு நீண்ட காலப் போராக உருவெடுத்துள்ளது. ஈரானுடனான மோதல் சில வாரங்களில் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் தொடக்கத்தில் உறுதியளித்திருந்தாலும், அது தற்போது முடிவின்றி நீண்டுகொண்டே செல்வது அமெரிக்க மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் போரினால் உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் நேரடி விளைவாக அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை விண்ணைத் தொட்டுள்ளது.

இது சாமானிய அமெரிக்கக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற இடைத்தேர்தலில் குடியரசுக் கட்சியினருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கணிக்கப்படுகிறது.

விலைவாசியைக் கட்டுப்படுத்துவேன் மற்றும் தேவையற்ற நீண்ட காலப் போர்களைத் தவிர்ப்பேன் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ட்ரம்ப், தற்போது அந்த வாக்குறுதிகளுக்கு மாறாகச் செயல்படுவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுப்பதே இந்தப் போரின் நோக்கம் என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டாலும், ஈரானின் உறுதியான எதிர்ப்பு மற்றும் போரினால் ஏற்படும் பொருளாதாரப் பாதிப்புகளை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இந்த ஆய்வில் கலந்துகொண்ட 80 சதவீத மக்கள், ஈரானுடனான இந்தப் போர் இன்னும் நீண்ட காலத்திற்குத் தொடரும் என்றே நம்புகின்றனர்.

இதில் ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 71 சதவீத மக்களும் இதே கருத்தையே கொண்டிருப்பதுதான் ட்ரம்பிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவால்.

ஒருபுறம் போர்க்களத்தில் ஈரான் கடுமையான எதிர்ப்பைக் காட்டி வரும் நிலையில், மறுபுறம் அமெரிக்காவின் உள்நாட்டு அரசியலில் ட்ரம்பிற்கான ஆதரவு சரிந்து வருவது சர்வதேச அரங்கில் பெரும் விவாதப் பொருளாகியுள்ளது.

சுமார் 1,166 அமெரிக்கர்களிடம் நடத்தப்பட்ட இந்த விரிவான ஆய்வின் முடிவுகள், வரவிருக்கும் அரசியல் மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் போர் எப்போது முடிவுக்கு வரும் அல்லது அமெரிக்காவின் பொருளாதாரம் இந்த நெருக்கடியிலிருந்து எப்படி மீளும் என்பது இப்போதைக்கு மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

Related News

Latest News