இலவச முழு உடல் பரிசோதனை: யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம் இதோ…

தமிழ்நாடு அரசு, முதியவர்கள் மற்றும் பொதுமக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு மருத்துவத் துறையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவரும் பயன்பெறும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருமான வரம்பு எதுவுமின்றி, 70 வயதை கடந்த அனைத்து முதியவர்களும் இத்திட்டத்தில் இணையலாம். சுமார் 38 லட்சம் முதியவர்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனைகளில் புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட தீவிர மற்றும் நாள்பட்ட நோய்களுக்கு கட்டணமின்றி உயர்தர சிகிச்சை பெற முடியும். மேலும், பல்வேறு நோய் கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளலாம்.

அதேபோல், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆண்டுதோறும் இலவச முழு உடல் பரிசோதனை வழங்கும் ‘நலம் 360’ திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், இசிஜி, ஹீமோகுளோபின், ரத்தச் சர்க்கரை உள்ளிட்ட 14 அடிப்படை பரிசோதனைகள் இதில் இடம்பெறும். இதற்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் மூலம் முதியோரின் மருத்துவச் செலவு குறைவதுடன், நோய்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பதற்கும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News