அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை [ICE] தனது அதிகாரிகளுக்கு வழங்கப்போகும் ஒரு புதிய கருவி, இப்போது சர்வதேச அளவில் பெரும் மனித உரிமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சுமார் 10 மில்லியன் முதல் 20 மில்லியன் டாலர் மதிப்பீட்டில், ‘தி கிளவு்’ [The GLOVE – Generated Low Output Voltage Emitter] என்று அழைக்கப்படும் மின்சார அதிர்ச்சியைத் தரக்கூடிய கையுறைகளை அதிகாரிகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
பார்ப்பதற்கு சாதாரண ரோந்து கையுறைகளைப் போலவே இருக்கும் இந்தக் கருவியில் உள்ள ஒரு பட்டனை அழுத்தினால், அது மின்சார மோடிற்கு [Electrical mode] மாறிவிடும்.
அதிகாரிகளின் பேச்சைக் கேட்க மறுப்பவர்கள் அல்லது சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்களைக் கைது செய்யும்போது, அவர்கள் மீது இந்தக் கையுறையை வைத்து அழுத்தினால், உடலில் பாயும் மின்சாரம் கடும் வலியை உண்டாக்கி அவர்களை உடனடியாக அடிபணிய வைக்கும்.
இந்தத் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது ஒரு “தேவையற்ற மற்றும் கொடூரமான” நடவடிக்கை என நியூயார்க் அட்டர்னி ஜெனரல் லெட்டிஷியா ஜேம்ஸ் [Letitia James] சாடியுள்ளார்.
இந்தக் கையுறையைத் தவறாகப் பயன்படுத்தும் அதிகாரிகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் [Donald Trump] தலைமையிலான சட்டவிரோதக் குடியேற்றத் தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி மாற்றம் பார்க்கப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற மின்சாரக் கருவிகள் சிறைச்சாலைகளுக்குள்ளேயே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இப்போது முதன்முறையாகச் சாலைகளில் மக்களைக் கைது செய்யவும் இதைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஐ.சி.ஈ [ICE] அமைப்பு.
இந்தக் கையுறைகள் உயிருக்கு ஆபத்தில்லாதவை [Non-lethal] என்று அதன் தயாரிப்பு நிறுவனம் கூறினாலும், நிஜத்தில் நடந்த சில சம்பவங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
கடந்த 2024-ஆம் ஆண்டு கென்டக்கி சிறையில் 43 வயது நபர் ஒருவர் இந்தக் கையுறையினால் 27 முறையும், டேசர் [Taser] கருவியால் 13 முறையும் தாக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒரு முக்கிய முன்னுதாரணமாகச் சொல்லப்படுகிறது.
மின்சார அதிர்ச்சியை 15 வினாடிகளுக்கு மேல் கொடுக்கக் கூடாது என்ற விதிமுறை இருந்தாலும், அந்தச் சம்பவத்தில் சுமார் 99 வினாடிகள் வரை மின்சாரம் பாய்ச்சப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தகைய கருவிகள் அதிகாரிகளின் கைகளில் கிடைத்தால், அது தேவையற்ற சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் என்ற கவலை சமூக ஆர்வலர்களிடையே எழுந்துள்ளது.
மேலும், முதியவர்கள், சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிராக இந்தக் கையுறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற கடுமையான எச்சரிக்கை அதன் பயன்பாட்டு கையேட்டில் [User manual] உள்ளது.
ஆனால், பதற்றமான சூழலில் அல்லது போராட்டங்களின் போது அதிகாரிகள் இந்த விதிகளை முறையாகப் பின்பற்றுவார்களா என்பது கேள்விக்குறியே. “குற்றவாளிகளைக் பாதுகாப்பாக அப்புறப்படுத்தவே இத்தகைய நவீன கருவிகள் தேவைப்படுகின்றன” என்று உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை [DHS] விளக்கம் அளித்தாலும், இது ஒரு சட்டவிரோத சித்திரவதைக் கருவியாக மாறிவிடுமோ என்ற அச்சமே மேலோங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலை நெருங்கும் வேளையில், குடியேற்றக் கொள்கைகள் தொடர்பாக எடுக்கப்படும் இந்த அதிரடி முடிவு, அந்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
