தமிழகத்தில் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு முறையில் புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்டவர்கள் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நேரில் செல்லாமல், ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் ‘Presence-less Registration’ முறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த முறையில், சொத்து வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் TNREGINET இணையதளத்தில் Login ID உருவாக்கி, தேவையான ஆவணங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். அனைவரின் ஆதார் விவரங்களும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை சார்பதிவாளர் 24 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து பதிவை நிறைவு செய்வார். குறைகள் இருந்தால், அவற்றை சரிசெய்து 30 நாட்களுக்குள் மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.
பதிவு முடிந்ததும், சார்பதிவாளரின் டிஜிட்டல் கையொப்பத்துடன் ஆவணம் பயனாளியின் லாகினில் பதிவேற்றப்படும். இதனை வீட்டிலிருந்தே பதிவிறக்கம் செய்து சட்டப்பூர்வ ஆவணமாக பயன்படுத்தலாம்.
மேலும், போலி ஆவணங்களைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆவணத்திலும் Dynamic Random Five Colours குறியீடு மற்றும் ஒவ்வொரு பக்கத்திலும் QR குறியீடு இடம்பெறும். டிஜிட்டல் கையொப்பம் மூலம் ஆவணத்தின் உண்மைத்தன்மையையும் சரிபார்க்கலாம்.
பதிவு செய்யப்பட்ட ஆவணத்தின் வண்ண நகலை 60 நாட்கள் வரை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த நடைமுறை முதன்முறையாக விற்கப்படும் வீட்டு மனைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பத்திரப்பதிவு எளிதாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
